Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த உபசாரத்தின் போது பினாகபாணி அந்தச் சபா மண்டபத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. வாசற்படிக்கு அப்பால் நின்ற கூட்டத்தில் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடைய கவனம் வேறு இடத்தில் இருந்தது என்பதை முன்னமே பார்த்தோம். பினாகபாணியோ வந்தியத்தேவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவையும் பார்த்தும், பார்க்காததுபோல் கவனித்துக் கொண்டிருந்தான் இன்னொருவன். அவன் தான் நம் பழைய தோழனாகிய ஆழ்வார்க்கடியான்.
இளவரசர் மதுராந்தகருக்கு நிமித்தம் பார்த்துச் சொல்லி அவர் மனத்தைக் கலக்கிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனைக்கு வெளியில் வந்தான். அங்கே சற்றுத் தூரத்தில் நின்று காத்துக் கொண்டிருந்த வைத்தியர் மகன் அவனை நெருங்கி வந்து, “அப்பனே! நீ யார்?” என்று கேட்டான்.
வந்தியத்தேவன் பினாகபாணியைப் பார்த்துத் திடுக்கிட்டான். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “என்ன கேட்டாய்?”
“நீ யார் என்று கேட்டேன்” என்றான்.
“நான் யார் என்றா கேட்கிறாய்? எந்த நானைக் கேட்கிறாய்? மண், நீர், தேயு, வாயு, ஆகாசம் என்கிற பஞ்ச பூதங்களினாலான இந்த உடம்பைக் கேட்கிறாயா? உயிருக்கு ஆதாரமான ஆத்மாவைக் கேட்கிறாயா? ஆத்மாவுக்கும் அடிப்படையான பரமாத்மாவைக் கேட்கிறாயா? அப்பனே! இது என்ன கேள்வி? நீயும் இல்லை, நானும் இல்லை. எல்லாம் இறைவன் மயம்! உலகம் என்பது மாயை; பசு, பதி, பாசத்தின் உண்மையை திருநாறையூர் நம்பியைப் போன்ற பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்!” என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனை வாசலில் நின்ற தன் குதிரை மேல் தாவி ஏறினான். குதிரையைச் சிறிது நேரம் வேகமாகச் செலுத்திய பிறகு வைத்தியர் மகன் தன்னைப் பின் தொடரவில்லை என்று தெரிந்துகொண்டு மெள்ள மெள்ள விட்டுக்கொண்டு போனான்.