Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
பழையாறை நகரின் வீதிகள் அன்று வரை என்றும் கண்டிராதபடி அல்லோலகல்லோலமாயிருந்தன. அத்தென்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை நோக்கி ஜனங்கள் திரள் திரளாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும், வயோதிகர்களும், வாலிபர்களும், சிறுவர்களும் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். சைவர்களும் வைஷ்ணவர்களும்; பௌத்தர்களும், சமணர்களும் அக்கூட்டத்தில் கலந்திருந்தார்கள். கடும் விரதங்கள் கொண்ட காலாமுகர்கள் சிலரும் அக்கூட்டத்தில் ஆங்காங்குக் காணப்பட்டார்கள். மக்களில் அநேகர் அழுது புலம்பிக் கொண்டு சென்றார்கள். பலர் பழுவேட்டரையர்களை வாயாரச் சபித்துக் கொண்டு சென்றார்கள்.
வாலிபர்கள் சிலர் ஆங்காங்கே கையில் கழிகளுடன் காணப்பட்டார்கள். அவர்கள் அவ்வப்போது ஒருவருடைய கழியை இன்னொருவர் தட்டி ஓசைப் படுத்திக்கொண்டு சென்றார்கள். கழி அடிபடும் ஓசை கேட்டதும், “பழுவேட்டரையர்களின் தலையில் அப்படிப் போடு!” என்று சிலர் மெதுவாகச் சொன்னார்கள்; சிலர் அவ்வாறு சத்தம் போட்டும் கத்தினார்கள். சத்தம் போட்டுக் கத்தியவர்களில் காலாமுகர்கள் முக்கியமாயிருந்தார்கள்.
பழையாறையிலிருந்த முக்கியமான இராஜ மாளிகைகளின் முன் முகப்புகள் பிறைச்சந்திரன் வடிவமாக அமைந்திருந்தன. எல்லா மாளிகைகளுக்கும் சேர்ந்து முன் பக்கத்தில் விசாலமான நிலாமுற்றம் இருந்தது. விசேஷமான சந்தர்ப்பங்களில் பதினாயிரக்கணக்கான மக்கள் கூடி நிற்கும்படியாக அந்த நிலா முற்றம் விசாலமாய் இருந்தது. முற்றத்தைச் சூழ்ந்து வெளிப்புறத்தில் உயரமான மதில் சுவர் இருந்தது. அந்த மதில் சுவருக்கு மூன்று வாசல்கள் இருந்தன. ஒவ்வொரு வாசலிலும் சில அரண்மனைச் சேவகர்கள் காவல் புரிந்தார்கள்.