Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
பனை இலச்சினை தாங்கிய மோதிரம் கதைகளில் வரும் மாய மோதிரத்தைப் போல் அபாரமான மந்திர சக்தி வாய்ந்ததாயிருந்தது. காலை நேரத்தில் பால், தயிர் விற்பவர்கள், பூக்கூடைக்காரர்கள், கறிகாய் விற்பவர்கள், பழக் கடைக்காரர்கள், மற்றும் பல தொழில்களையும் செய்வோர், கணக்கர்கள், உத்தியோகஸ்தர்கள் முதலியோர் ஏகக் கூட்டமாகக் கோட்டைக்குள் பிரவேசிக்க முயன்று கொண்டிருந்தார்கள். கோட்டைக் கதவின் திட்டிவாசலைத் திறந்து அவர்களை ஒவ்வொருவராக உள்ளே விடுவதிலே கோட்டை வாசற் காவலர்கள் தங்கள் படாடோப அதிகாரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் இளம் வீரன் பனை இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டியதுதான் தாமதம், காவலர்கள் மிக்க மரியாதை காட்டி, கோட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்து விட்டார்கள்; வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தான்.
ஆகா! தஞ்சைபுரிக் கோட்டைக்குள் அவன் கால் வைத்த வேளை என்ன வேளையோ தெரியாது! அதிலிருந்து எத்தனை எத்தனை முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்தன! சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திரத்திலேயே அது ஒரு முக்கிய சம்பவமாகவல்லவா ஏற்பட்டது! கோட்டைக்குள் பிரவேசித்துச் சிறிது நேரம் வரை வந்தியத்தேவன் ஒரே பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான். காஞ்சி பழைய பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகரம். பல தடவை பகைவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது.அங்கிருந்த மாளிகைகளும் மண்டபங்களும் மற்ற கட்டடங்களும் பழைமையடைந்து சிதிலமாகிப் பூஞ்சக் காளான் பூத்திருந்தன. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கட்டடங்கள்தான். ஆனாலும் பல பகுதிகள் இடிந்தும் சிதைந்தும் கிடந்தன. ஆதித்த கரிகாலர் வந்த பிறகு புதுப்பித்துக் கட்டிய சில மாளிகைகள் மட்டும், பட்ட மரத்தில் ஒவ்வோரிடத்தில் தளிர்த்திருக்கும் மலர்களைப் போல் விளங்கி, நகரத்தின் பாழடைந்த தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டின.