Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான்.பிறகு வெறும் கூடையைக் கடைக்காரனுடைய தலையிலே கவிழ்த்த போது, வீரர்களும் வீதியில் சென்றவர்களும் ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று இரைந்து சிரித்தார்கள். இன்னொரு வீரன் வழியில் எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டியின் கையிலிருந்த பூக்கூடையைப் பிடுங்கினான். பூவையெல்லாம் வாரி இறைத்துக் கொண்டே “பூமாரி பொழிகிறதடா!” என்றான். அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள். எதிரில் வந்த ஒரு மாட்டு வண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான். மாடு மிரண்டு மக்கள் கூட்டத்திடையே புகுந்து சிலரைத் தள்ளிக் கொண்டு ஓடியது; மீண்டும் ஒரே கோலாகலச் சிரிப்புத்தான்!
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், “ஆகா! பழுவேட்டரையரின் வீரர்களைப் போல் இவர்களும் விளையாடுகிறார்கள். இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது. நல்லவேளை, இவர்களுடைய பார்வை நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம். இல்லாவிடில் ஒரு சண்டை ஏற்பட்டிருக்கும். வந்த காரியம் கெட்டுப் போயிருக்கும்” என்று எண்ணிக் கொண்டான்.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று. வேளக்காரப் படை வீரர்களின் விளையாடல்களை இங்குள்ள ஜனங்கள் அவ்வளவாக வெறுக்கவில்லை. அவர்களுடைய கொம்மாளத்தில் ஜனங்களும் சேர்ந்து சிரித்துக் குதூகலித்தார்கள்! இதைப் பற்றிக் கேட்கலாம் என்று திரும்பிப் பார்த்தபோது பூக்குடலைகளுடன் நின்ற சிறுவனை வந்தியத்தேவன் காணவில்லை. கூட்டத்திலும் கோலாகலத்திலும் அந்த வாலிபன் எங்கேயோ போய் விட்டான். ஒருவேளை அவனுடைய வேலையைப் பார்க்கப் போயிருக்கக்கூடும்.