Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார், “பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி…” என்று தயங்கினார்.
“உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து, நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் புவிச் சக்கரவர்த்திதான்!” என்றார் சுந்தர சோழர்.
புலவர்களிடையே பலவித வியப்பொலிகளும் ஆஹாகாரமும் எழுந்தன. சிலர் தங்களுடைய மனோநிலையை எவ்விதம் வெளியிடுவது என்று தெரியாமல் தலையையும் உடம்பையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தங்களுடைய மனோநிலை இன்னதென்று தங்களுக்கே தெரியாமல் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள்!
சுந்தர சோழர் கூறினார்: “புலவர் பெருமக்களே! ஒரு சமயம் பழையாறையில் புலவர்களும் கவிஞர்களும் என்னைப் பார்க்க வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் உங்களில் சிலரும் இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் சோழ குலத்தின் வள்ளல் தன்மையைக் குறித்து ஒவ்வொரு பாடல் சொன்னார்கள்; என்னைப் பற்றியும் பாடினார்கள். நான் ‘இவருக்கு அதைக் கொடுத்தேன்’, ‘அவருக்கு இதை அளித்தேன்’ என்றெல்லாம் பாடினார்கள். அச்சமயம் இளையபிராட்டி குந்தவையும் என் அருகில் இருந்தாள். புலவர்கள் பரிசில்கள் பெற்றுச் சென்ற பிறகு அவர்கள் பாடிய பாடல்களை அரசிளங்குமரி புகழ்ந்து பாராட்டினாள்.குந்தவையிடம் நான் ‘புலவர்களையெல்லாம் விட என்னால் நன்றாகப் பாட முடியும்’ என்று சபதம் கூறினேன். பிறகு தான் வேடிக்கையாக இந்தப் பாடலைப் பாடினேன். ‘எனக்குப் பரிசு கொடு!’ என்று கேட்டேன். குழந்தை என் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, ‘இந்தாருங்கள் பரிசு’ என்று கன்னத்துக்கு இரண்டு அறை கொடுத்தாள்! அது நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது; ஆனால் ஆண்டு எட்டுக்கு மேல் ஆகிறது!…” என்றார்.