Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள்.
அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார்.
“பிரபு! புது மருந்தினால் ஏதாவது பலன் தெரிகிறதா?” என்று கேட்டார்.
“பலன் தெரிகிறதாக மருத்துவர் சொல்லுகிறார்; தேவியும் சொல்கிறார்; ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கை உண்டாகவில்லை. உண்மையைச் சொன்னால், தளபதி! இதெல்லாம் வீண் முயற்சி என்றே தோன்றுகிறது. என் விதி என்னை அழைக்கிறது. யமன் என்னைத் தேடிக் கொண்டு பழையாறைக்குப் போயிருக்கிறான் என்றே நினைக்கிறேன்.அங்கே நான் இல்லையென்று அறிந்ததும், இவ்விடம் என்னைத் தேடிக் கொண்டு வந்து சேருவான்!…”
“பிரபு! தாங்கள் இப்படி மனமுடைந்து பேசக் கூடாது. எங்களையெல்லாம் இப்படி மனங்கலங்கச் செய்யக் கூடாது. தங்கள் குல முன்னோர்கள்…”
“ஆ! என் குல முன்னோர்கள் யமனைக் கண்டு அஞ்சியதில்லையென்று சொல்லுகிறீர்! எனக்கும் என் குல முன்னோர்கள் பலரைப் போல் போர்க்களத்தில் முன்னணியில் நின்று போர் செய்து உயிர் விடும் பாக்கியம் கிடைக்குமானால், அத்தகைய மரணத்துக்குச் சிறிதும் அஞ்ச மாட்டேன்; சோர்வும் கொள்ள மாட்டேன். உற்சாகத்துடன் வரவேற்பேன். என்னுடைய பெரிய தகப்பனார் இராஜாதித்தியர் தக்கோலத்தில் யானை மேலிருந்து போர் புரிந்தபடியே உயிர் நீத்தார். சோழ குலத்தின் வீரப் புகழைத் தக்கோலம் போர்க்களத்தில் என்றென்றும் நிலைநாட்டினார். ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ என்று புகழ்பெற்றார். நான் என்ன புகழைப் பெறுவேன்? ‘நோய்ப் படுக்கையில் துஞ்சிய சுந்தர சோழன்’ என்றுதானே பெயர் பெறுவேன்? என்னுடைய இன்னொரு பெரிய தகப்பனார், கண்டராதித்த தேவர் சிவபக்தியில் ஈடுபட்டு மரண பயத்தை விட்டிருந்தார். ஸ்தல யாத்திரை செய்வதற்கு மேற்குக் கடற்கரை நாடுகளுக்குப் போனார். அங்கேயே காலமானார். ‘மேற்கெழுந்தருளிய தேவர்’ என்று அவரும் பெயர் பெற்றார். அவரைப் போன்ற சிவபக்தனும் அல்ல நான்; ஸ்தல யாத்திரை செய்யவும் இயலாதவனாகி விட்டேன். இப்படியே எத்தனை நாள் படுத்திருப்பேன்? என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பாரமாக!…ஆனால் என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. அதிக காலம் நான் இந்தப் பூவுலகில் இருக்க மாட்டேன் என்று…”