Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில்லை. சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப் பார்க்கும்படி அவனுக்கு அனுமதி அளித்தது ஒருவேளை தவறோ என்றும் தோன்றியது. ஆதித்த கரிகாலரிடமிருந்து வந்தவனாதலால், அவனைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியது முறை. ஆனால் தமையனார் முத்திரை மோதிரத்துடன் அனுப்பியுள்ளபடியால் சந்தேகிக்க இடமில்லை. ஆகா! இம்மாதிரி காரியங்களில் பெரியவருக்கு வேறொருவர் ஜாக்கிரதை சொல்லித்தர வேண்டுமா, என்ன? ஆனாலும், தாம் திடீரென்று தரிசன மண்டபத்துக்குள் சென்ற பொழுது அவ்வாலிபன் தயங்கி நின்று பயந்தவன் போல் விழித்தது அவர் கண் முன்னால் தோன்றியது. “அபாயம்! அபாயம்!” என்று அவன் கூவியது நன்றாகக் காதில் விழுந்ததாக ஞாபகம் வந்தது. “அபயம்” என்று சொல்லியிருந்தால், அது தம் காதில் “அபாயம்” என்று விழுந்திருக்கக்கூடியது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் இவனை உடனே திருப்பி அனுப்பாமலிருப்பது நல்லது. தமையனார் வந்த பிறகு இவனைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொண்டு பிறகு உசிதமானதைச் செய்யலாம். இம்மாதிரி தீரனாகிய வாலிபனை நாம் நம்முடைய அந்தரங்கக் காவற் படையில் சேர்த்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். சமயத்தில் உபயோகமாயிருப்பான். ஏன்? இவனுக்கு இவனுடைய முன்னோர்களின் பழைய அரசில் ஒரு பகுதியை வாங்கிக் கொடுத்தாலும் கொடுக்கலாம். இம்மாதிரி பிள்ளைகளுக்கு ஒருமுறை உதவி செய்து விட்டால், அப்புறம் என்றைக்கும் நமக்குக் கட்டுப்பட்டு நன்றியுடனிருப்பார்கள். ஒருவேளை, இவன் உறுதியான விரோதி என்று ஏற்பட்டு விட்டால், அதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; எதற்கும் தமையனார் வந்து சேரட்டும் பார்க்கலாம்.