Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
அடர்ந்த மாந்தோப்புக்கிடையே சென்ற ஒற்றையடிப் பாதையின் வழியாக அம்மங்கை விடுவிடுவென்று நடந்து செல்ல, வந்தியத்தேவனும் விரைவாகத் தொடர்ந்து சென்றான். மரஞ் செடிகளின் மீது மோதிக் கொள்ளாமல், அந்த இருளில் நடந்து செல்லுவது கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு சமயம் இவன் மரத்தில் மோதிக் கொள்ளப் பார்த்துத் தயங்கி நின்றபோது, அந்த மங்கை திரும்பிப் பார்த்து, “ஏன் நிற்கிறாய்? வழி மறந்து போய் விட்டதா? நீதான் இருட்டில் கண் தெரிகிற மனிதன் ஆயிற்றே!” என்றாள். அதற்குப் பதிலாக வந்தியத்தேவன் உதட்டில் விரலை வைத்து முன்னால் அவள் சொன்னது போல் “உஷ்!” என்றான். அதே நேரத்தில் மதில் சுவருக்கு வெளியே ஏதோ சப்தம் கேட்டது. மனித நடமாட்டம் போலத் தொனித்தது. பிறகு இருவரும் மறுபடி நடந்தார்கள். கொஞ்ச தூரம் போனதும் வல்லவரையன் இலேசாகச் சிரித்தான். அந்த மங்கை திரும்பிப் பார்த்து, “என்னத்தைக் கண்டு சிரிக்கிறாய்?” என்றாள்.
“கண்டு சிரிக்கவில்லை; கேட்டுச் சிரிக்கிறேன்!”
“அப்படியென்றால்?…”
“என்னைத் தேடி வந்தவர்களின் காலடிச் சத்தத்தைச் சற்று முன் நீ கேட்கவில்லையா? அவர்கள் ஏமாந்து போனதை எண்ணிச் சிரிக்கிறேன்!”
அவள் சிறிது பயத்துடன், “உன்னை யாராவது தேடி வருகிறார்களா என்ன? எதற்காக?” என்றாள். “இல்லாவிட்டால் எதற்காக இந்தக் குருட்டு இருட்டில் மதில் சுவரில் வந்து மோதிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?” அச்சமயம் காற்றின் அசைவில் மரக்கிளைகள் விலகி நிலாக் கதிர் ஒன்று வந்தியத்தேவனுடைய முகத்தின் மீது விழுந்தது.