Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
தூரத்தில் பேரிகைகளின் பெருமுழக்கம் கேட்டது. எக்காளங்கள் சப்தித்தன. மனிதர்களின் குரல்கள் ஜயகோஷம் செய்தன. கோட்டைக் கதவுகள் திறந்து மூடிக் கொள்ளும் சத்தமும், யானைகள் குதிரைகளின் காலடிச் சத்தமும் எழுந்தன.
நந்தினியின் கவனத்தை அந்தச் சத்தங்கள் கவர்ந்தன என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். காவல் புரிந்த தாதிப் பெண் திடுக்கிட்டு எழுந்து சற்று அருகில் வந்து, “அம்மா! எஜமான் வந்து விட்டார் போலிருக்கிறது” என்றாள்.
நந்தினி, “எனக்குத் தெரியும்; நீ உன் இடத்துக்குப் போ!” என்றாள்.
பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, “தனாதிகாரி கோட்டையில் பிரவேசிக்கிறார். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தை விசாரித்து விட்டு, கோட்டைத் தளபதியைப் பார்த்துப் பேசிவிட்டு, இங்கே வருவார்.வருவதற்குள் நீ போய்விட வேண்டும். ஆழ்வார்க்கடியார் கூறிய செய்தி என்ன?” என்று வினவினாள்.
“அம்மணி! அந்த வீர வைஷ்ணவ சிகாமணி தங்களை அவருடைய சகோதரி என்று சொல்லிக் கொண்டார்; அது உண்மைதானா?” என்று வல்லவரையன் கேட்டான்.
“அதைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்?”
“பச்சைக் கிளியும் கடுவன் குரங்கும் ஒரு தாயின் குழந்தைகள் என்றால் எளிதில் நம்ப முடியுமா?”
நந்தினி சிரித்துவிட்டு, “ஒரு விதத்தில் அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் ஒரே வீட்டில், ஒரே குடும்பத்தில் வளர்ந்தோம். உடன்பிறந்த தங்கையைப் போலவே என்னிடம் பிரியம் வைத்திருந்தார். பாவம்! அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்து விட்டேன்!”