Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
முதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் பழுவேட்டரையர் அறிந்திருந்தார். அப்படி நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்பது அவர் காதுக்கு எட்டியிருந்தது. ஆனால் குந்தவை என்ன சொன்னாள் என்பதை இதுவரை யாரும் அவரிடம் பச்சையாக எடுத்துச் சொல்லவில்லை. இப்போது நந்தினியின் வாயினால் அதைக் கேட்டதும் அவருடைய உள்ளம் கொல்லர் உலைக் களத்தை ஒத்தது. குப், குப் என்று அனல் கலந்த பெருமூச்சு வந்தது. நந்தினியின் கண்ணீர் அவருடைய உள்ளத் தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய நெய்யாக உதவிற்று.
“என் கண்ணே! அந்தச் சண்டாளப் பாதகி அப்படியா சொன்னாள்? என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள்? இருக்கட்டும்; அவளை…அவளை….என்ன செய்கிறேன், பார்! எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார்! இன்னும்…அவளை…அவளை…..” என்று பழுவேட்டரையர், கோபாவேசத்தினால் பேச முடியாது தத்தளித்தார். அவர் முகம் அடைந்த கோர சொரூபத்தை வர்ணிக்க முடியாது.
நந்தினி அவரைச் சாந்தப்படுத்த முயன்றாள். அவருடைய இரும்புக் கையைத் தன் பூவையொத்த கரத்தினால் பற்றி விரல்களோடு விரல்களை இணைத்துக் கோத்துக் கொண்டாள்.
“நாதா! எனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கள் பொறுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து இரத்தத்தைக் குடிக்கும் வலிமையுள்ள சிங்கம், கேவலம் ஒரு பூனையின் மீது பாய முடியாது. குந்தவை ஒரு பெண் பூனை. ஆனால் பெரிய மந்திரக்காரி. மாயமும் மந்திரமும் செய்துதான் எல்லோரையும் அவள் இஷ்டம் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்! இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்! அவளுடைய மந்திரத்தை மாற்று மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். தங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுங்கள். இன்றைக்கே நான் இந்த மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்…” என்று கூறி மீண்டும் விம்மினாள்.