Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
காணாமற்போன வந்தியத்தேவன் என்ன ஆனான் என்பதை இப்போது நாம் கவனிக்கலாம். இருளடர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா? மந்திரவாதியும் நந்தினியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவன் முதலில் காது கொடுத்துக் கேட்க முயன்றான். ஆனால் அவர்களுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவ்வளவாக அவனுக்குச் சிரத்தையும் இல்லை. நந்தினியுடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் அறிவு தன்னை விட்டு அகன்று ஒருவித போதை உணர்ச்சி உண்டாகியிருந்தது என்பதை இப்போது உணர்ந்தான். மறுபடியும் அவளைச் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டு போய்விட்டால் நல்லது. பழுவேட்டரையர்களிடம் அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் இந்த இளையராணியிடம் அகப்பட்டு கொள்வதில் அபாயம் அதிகம் இருக்கிறது. அவர்கள் முன்னிலையில் தன் அறிவு நன்றாய் இயங்குகிறது; தோள் வலி ஓங்குகிறது; அரையில் உள்ள கத்தியில் எப்போதும் கை இருக்கிறது. யுக்தியினாலும் ஒரு கை பார்க்கலாம்; கத்தியினாலும் ஒரு கை பார்க்கலாம். ஆனால் இந்த மோகினியின் முன்னால் புத்தி மயங்கி விடுகிறது; கையும் கத்தி பிடிக்கும் சக்தியை இழந்து விடுகிறது. மீண்டும் இவள் முன்னால் சென்றால், என்ன நேருமோ என்னவோ? போதும் போதாதற்கு மந்திரவாதி ஒருவனுடைய கூட்டுறவும் இவள் வைத்துக் கொண்டிருக்கிறாள்! இரண்டு பேரும் சேர்ந்து என்ன மாயமந்திரம் செய்வார்களோ? குந்தவைப் பிராட்டியிடந்தான் இவளுக்கு எவ்வளவு துவேஷம்? அந்தத் துவேஷம் இவளுடைய கண்களில் தீப்பொறியாக வெளிப்படுகிறதே! ஒருவேளை மனத்தை மாற்றிக் கொண்டு பழுவேட்டரையரிடம் தன்னைப் பிடித்துக் கொடுத்தாலும் கொடுத்து விடலாம்! பெண்களின் சபல சித்தமும் சஞ்சல புத்தியும் பிரசித்தமானவை அல்லவா? ஆகையால் மீண்டும் இவளைச் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டு போய் விட்டால் நல்லது. ஆனால் எப்படி? தோட்டத்துக்குள் புகுந்துதான் வழி கண்டுபிடித்துப் போக வேண்டும்! மதில் ஏறிக் குதிக்க வேண்டும்! மதிலுக்கு வெளியில் தன்னைத் தேடி வந்தவர்கள் காத்திருந்தால்?…. வேறு ஏதேனும் உபாயம் இல்லையா? வந்தியத்தேவா! இத்தனை நாளும் உனக்கு உதவி செய்து வந்த அதிர்ஷ்டம் எங்கே போயிற்று? யோசி! யோசி! மூளையைச் செலுத்தி யோசி! கண்களையும் கொஞ்சம் உபயோகப்படுத்து! நாலாபக்கமும் பார்! இதோ இந்த இருள் அடைந்த மாளிகை இருக்கிறதே! இது ஏன் இருளடைந்திருக்கிறது? இதற்குள்ளே என்ன இருக்கும்? இதன் உள்ளே புகுந்தால் இதன் இன்னொரு வாசல் எங்கே கொண்டு போய் விடும்? எல்லாவற்றுக்கும் இதற்குள் புகுந்து பார்த்து வைக்கலாமா? இப்போது உபயோகப்படாவிட்டாலும் வேறு ஒரு சமயத்துக்கு உபயோகப்படலாம். யார் கண்டது?