Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
சோழகுல மூதாட்டியின் சந்நிதியிலிருந்து ஆழ்வார்க்கடியான் இளையபிராட்டியின் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் பழையாறை வீதிகளில் கண்ட காட்சிகள் அவனுக்கு மிக்க உற்சாகத்தை அளித்தன. கண்ணன் பிறந்த திருநாளை இந்த ஜனங்கள் எவ்வளவு குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்? வைஷ்ணவம் இந்தச் சோழ நாட்டில் நிலைத்து நின்று பரவப் போகிறது என்பதில் ஐயம் இல்லை. சைவ சமயத்துக்கு இங்கே செல்வாக்குப் பெருகுவதற்குப் பல காரணங்கள் உண்டு. நூறு வருஷ காலமாகச் சோழ குலத்து மன்னர்கள் புதிய புதிய சிவாலயங்களை நாடெங்கும் நிர்மாணித்து வருகிறார்கள். மூவர் பாடிய தேவாரப் பாசுரங்கள் அக்கோயில்களின் மூலமாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. சிவாலயங்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இப்படியெல்லாமிருந்தும் திருமாலின் பெருமைக்கு யாதொரு குறையும் ஏற்படவில்லை. விஷ்ணுமூர்த்தியின் ஒன்பதாவது பரிபூரண அவதாரமாகிய கண்ணன், மக்களின் இதயத்தைக் கவர்ந்து விட்டான். கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் வட மதுரையிலும் எம்பெருமான் நிகழ்த்திய லீலைகள் இவர்களுடைய உள்ளத்தில் குடிகொண்டு விட்டன. அம்மம்மா! எத்தனை பாகவத கோஷ்டிகள்! எத்தனை வீதி நாடகங்கள்! எத்தனை விதவிதமான வேஷங்கள்! – ஆம்; முன்னம் நாம் பார்த்ததைக் காட்டிலும் இப்போது அதிகமாகவே இருந்தன. கோஷ்டிகளைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்ப்போரின் கூட்டமும் ஆரவாரமும் கூட அதிகமாகவே இருந்தன. பழையாறையைச் சுற்றிலுமிருந்த கிராமங்களிலிருந்து புதிய புதிய நாடக கோஷ்டியினர் வந்து கொண்டேயிருந்தார்கள்.
நாடக கோஷ்டி ஒன்றில் வஸுதேவர், தேவகி, கிருஷ்ணன், பலராமன், கம்ஸன் ஆகியவர்கள் வேஷம் தரித்துக் கொண்டு வந்தார்கள். பாட்டும், கூத்தும், வேஷக்காரர்களின் பேச்சும் இந்தக் கோஷ்டியில் அதிகமாயிருந்தபடியால் ஆழ்வார்க்கடியான் சற்று நின்று கவனித்தான். அப்போது கிருஷ்ணனுக்கும், கம்ஸனுக்கும் சம்வாதம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வேஷம் பூண்டிருந்தவன் சிறு பிள்ளை. அவன் மழலைச் சொல்லினால் கம்ஸன் செய்த குற்றங்களை எடுத்துக் கூறி, “வா, என்னோடு சண்டைக்கு!” என்று அழைத்தான். அதற்குக் கம்ஸன் உரத்த இடிமுழக்கக் குரலில், “அடே! கிருஷ்ணா! உன் மாயாவித்தனமெல்லாம் இனி என்னிடம் பலிக்காது. உன்னை இதோ கொல்லப் போகிறேன். உன் அண்ணன் பலராமனையும் கொல்லப் போகிறேன். உன் அப்பன் வஸுதேவனையும் கொல்லப் போகிறேன். அதோ நிற்கிறானே, உடம்பெல்லாம் சந்தனத்தைக் குழைத்து நாமமாகப் போட்டுக் கொண்டு – அந்த வீர வைஷ்ணவனையும் கொன்று விடப் போகிறேன்!” என்று கூறியதும், சுற்றிலும் நின்றவர்கள் எல்லாரும் நமது ஆழ்வார்க்கடியானைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். கிருஷ்ணன், பலராமன் வேஷம் போட்டிருந்தவர்கள் கூட அவனை நோக்கினார்கள். கூட்டத்தில் பலர் அவனை நெருங்கி வந்து சூழ்ந்து கொண்டு ‘கெக் கெக்கே’ என்று சிரிக்கவும் கேலி செய்யவும் ஆரம்பித்தார்கள்.