Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
மறு நாள் காலையில் சூரிய பகவான் உதயமாகி உலகத்தை ஒளிமயமாகச் செய்து கொண்டிருந்தார். சூரியனுடைய செங்கிரணங்கள் பழையாறை அரண்மனைகளின் பொற்கலசங்களின் மீது விழுந்து தகதகா மயமாய்ச் செய்து கொண்டிருந்தன. குந்தவைப் பிராட்டியின் மாளிகை முன்றிலில் அம்பாரி வைத்து அலங்கரித்த மாபெரும் யானை ஒன்று வந்து நின்றது. குந்தவையும் வானதியும் மாளிகையின் உள்ளேயிருந்து வெளி வந்து மேடைப் படிகளின் மீது ஏறி யானையின் மேல் ஏறிக் கொண்டார்கள். படை வீடுகளுக்கு நடுவில் இருந்த பராந்தக சோழர் ஆதுர சாலையை நோக்கி யானைப் பூமி அதிரும்படி நடந்து சென்றது. யானைப் பாகன் அதனருகில் நடந்து, அதன் நடை வேகத்தைக் குறைத்து அழைத்துச் சென்றான். யானையின் மணி ஓசையைக் கேட்டு நகர மாந்தர் தத்தம் வீடுகளுக்குள்ளேயிருந்து விரைந்து வெளி வந்து பார்த்தார்கள். பெண்ணரசிகள் இருவரையும் கண்டதும் அவர்கள் முகமலர்ந்து கைகூப்பி நின்று முகமன் செலுத்தினார்கள்.
மற்ற வீதிகளைக் கடந்து, யானை, படை வீடுகள் இருந்த நகரத்தின் பகுதியை அடைந்தது. அந்த வீதிகளின் தோற்றமே ஒரு தனி மாதிரியாகத்தான் இருந்தது. கொழுத்த சேவற் கோழிகள் ஒன்றையொன்று சண்டைக்காகத் தேடிக் கொண்டு சென்றன. வளைந்து சுருண்ட கொம்புகளையுடைய ஆட்டுக் கடாக்கள் “போருக்கு வருவோர் யாரேனும் உண்டோ?” என்ற பாவனையுடன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றன. ரோஸம் மிகுந்த வேட்டை நாய்களைத் தோல் வாரினாலும் மணிக் கயிறுகளினாலும் வீட்டு வாசல் தூண்களில் பிணைத்திருந்தார்கள். சின்னஞ் சிறு பிள்ளைகள் கைகளில் மூங்கில் கழி பிடித்து ஒருவரோடொருவர் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலம்பக் கழிகள் மோதிக் கொண்ட போது, ‘சடசடா படபடா’ என்ற ஓசைகள் எழுந்தன.