Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
அறிவைப் போலவே ஆற்றலும் ஆற்றலைப் போல அனுபவமும் பெற்று முதிர்ச்சி அடைந்திருந்த திருக்கோவலூர் மலையமான் அரசர் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, ஆதித்த கரிகாலன் மூர்ச்சையடைந்து விழுந்து விடவில்லைதான்! ஆயினும் சிறிது நேரம் செயல் இழந்து ஸ்தம்பித்து நின்று விட்டான். பார்த்திபேந்திரனும் வாயடைத்துப் போய் மௌனமாகி நின்றான். கடலும் ஓசை அடங்கி விட்டதாகத் தோன்றியது. தூரத்தில் படகிலிருந்து பண்டங்களை இறக்கி மரக்கலங்களில் ஏற்றுவோரின் ‘ஏலேலோ’ சத்தங்கூட அச்சமயம் அடங்கி நின்று போயிருந்தது.
வியப்புக்கு இடங்கொடுத்து விட்டதற்காக வெட்கப்பட்ட ஆதித்த கரிகாலன், சட்டென்று பாட்டனார் முகத்தை நிமிர்ந்து நோக்கி, “தாத்தா! இப்படியெல்லாம் நாடு நகரங்களில் சிலர் பேசி வருவதாக என் காதிலும் விழுந்தது. அது வெறும் பொய் வதந்தி என்று எண்ணியிருந்தேன். நீங்கள் இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்களே? தெரிந்து கொண்டுதான் சொல்கிறீர்களா? இப்படியும் நடக்கக்கூடுமா!” என்றான்.
“ஏன் நடக்க முடியாது? உன் பாட்டனாருக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் கண்டராதித்த தேவர்தானே சோழ நாட்டை ஆண்டார்! அவருடைய குமாரனுக்கு உங்களைக் காட்டிலும் அதிக உரிமை இந்த ராஜ்யத்தில் உண்டல்லவா?” என்றார் மலையமான் மிலாடுடையார்.