Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
அந்த இடத்தில், அந்த நேரத்தில், தேவராளனைப் பார்த்ததும், வந்தியத்தேவனுடைய உள்ளம் சிறிது துணுக்குற்றது. கடம்பூர் அரண்மனையில் தேவராளன் வெறியாட்டம் ஆடியதும், அப்போது அவன் கூறிய மொழிகளும் நினைவுக்கு வந்தன. நடுக்கடலில் சுழற்காற்றுக் குமுறிக் கொண்டிருந்த வேளையில் ரவிதாஸனும், தேவராளனும் சொன்ன செய்திகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும் அவர்கள் ஏதோ ஒரு மர்மமான பயங்கரமான சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் என்பது நிச்சயம். அவர்களில் ஒருவனிடம் இச்சமயம், அதுவும் இந்த நிர்மானுஷ்யமான இடத்தில் அகப்பட்டுக் கொண்டோ மே என்று நினைத்தான். அவனிடமிருந்து தப்பி, குதிரையை வேகமாகத் தட்டி விட்டுக் கொண்டு போய்விடலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அந்த எண்ணத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான்! தூரத்தில் தீயின் வெளிச்சம் தெரிந்தது. அது சுடுகாடாய்த்தான் இருக்கவேண்டும்.
‘ஏதோ ஒரு மண்ணுடல் தீக்கிரையாகிக் கொண்டிருக்கிறது. அந்த மண்ணுடலில் உயிர் இருந்த காலத்தில் எத்தனை எத்தனை ஆசாபாசங்களால் அலைப் புண்டிருக்கும்? எத்தனை இன்ப துன்பங்களை அது அநுபவித்திருக்கும்! அரை நாழிகை நேரத்தில் மிச்சம் இருக்கப் போவது ஒரு பிடி சாம்பல்தான்! உலகில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒருநாள் அடைய வேண்டிய கதி அதுவேதான்; மன்னாதி மன்னர்களும் சரி, ஏழைப் பிச்சைக்காரனும் சரி, ஒரு நாள் அக்கினிக்கு இரையாகிப் பிடி சாம்பலாகப் போக வேண்டியவர்களே!’