Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
இந்தக் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாகிய மதுராந்தகத் தேவரைக் கதை ஆரம்பத்தில் கடம்பூர் மாளிகையிலேயே நாம் சந்தித்தோம். இன்னொரு முறை பழுவேட்டரையரின் பாதாள நிலவறைப் பாதை வழியாக நள்ளிரவில் அவர் அரண்மனைக்குச் சென்றபோது பார்த்தோம். அப்பொழுதெல்லாம் அந்தப் பிரசித்திபெற்ற இளவரசரை, – பின்னால் பரகேசரி உத்தம சோழர் என்னும் பட்டப் பெயருடன் தஞ்சைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகிறவரை – நல்லமுறையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. அந்தக் குறையை இப்போது நிவர்த்தி செய்து வைக்க விரும்புகிறோம்.
மதுராந்தகரைப்பற்றிச் சொல்லுவதற்கு முன்னால் அவருடைய பரம்பரையைக் குறித்தும் வாசகர்களுக்குச் சிறிது ஞாபகப்படுத்த வேண்டும். சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு முன்னால் சோழ நாட்டில் நீண்ட காலம் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள்.
தமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் நிறைவேறவில்லை. ஆயினும் சில பாடல்களைச் சேகரித்தார். தேவாரப் பதிகங்களின் முறையில் தாமும் சில பாடல்களைப் பாடினார். அவற்றில் சிதம்பரத்தைப் பற்றி அவர் பாடிய பதிகம் திருவிசைப்பா என்ற தொகுதியில் இன்றும் வழங்கி வருகிறது.