Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
நம்பியாண்டார் நம்பியை வரவேற்பதற்காகக் கூடியிருந்த சபை கலையும் சமயத்தில் பெரிய மகாராணி தம் செல்வக் குமாரனிடம், “மகனே! நான் இவர்களை அரண்மனை வாசல் வரையில் சென்று வழியனுப்பி விட்டு வருகிறேன். அதற்குள் நீ உன் இருப்பிடம் சென்று சிரமபரிகாரம் செய்து கொண்டு திரும்பி வா! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்!” என்றார்.
“ஆகட்டும், தாயே” என்று சொல்லிவிட்டு மதுராந்தகர் புறப்பட்டார். அரண்மனையில் அவர் தங்கியிருந்த பகுதிக்குப் போனார். அவருடைய உள்ளத்தில் ஆத்திரமும், அசூயையும் கொழுந்து விட்டு எரிந்தன. யாரோ வழியோடு போகிற ஆண்டிப் பண்டாரத்துக்கு எவ்வளவு தடபுடலான மரியாதைகள்! இராஜ குலத்தின் கௌரவத்துக்கே தம் தாயினால் பங்கம் நேர்ந்துவிடும் போலல்லவா இருக்கிறது! பழுவேட்டரையர்கள் தம் அன்னையைப் பற்றி அடிக்கடி குறை சொல்லுவதில் வியப்பு ஒன்றுமில்லை. உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு யார் வந்தாலும் பெரிய மகாராணிக்குப் போதும்! பதிகம் ஒன்றும், அவன் பாடிக்கொண்டு வந்துவிடவேண்டும்; அல்லது கோயில், குளம், திருப்பணி என்று சொல்லிக் கொண்டு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்து இராஜாங்க பொக்கிஷத்தையே இவர் சூனியமாக்கி விடுவார் போலிருக்கிறது! போதாதற்கு இளவரசி குந்தவை ஒருத்தி எப்போதும் அருகில் இருக்கிறாள். கோவில் திருப்பணி செய்து மிச்சம் ஏதேனும் இருந்தால், அதை மருத்துவச் சாலை ஏற்படுத்துவதற்காகச் செலவிட்டு விடுகிறாள். இப்படியெல்லாம் இவர்கள் செய்வதற்கு இடம் கொடுத்து வந்தால் நாளை நம்முடைய மனோரதம் எப்படி நிறைவேறும்? சோழ சிங்காதனத்தில் ஏறி நாலா திசைகளிலும் சோழ சைன்யங்களை அனுப்பி இந்த நில உலகம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் ஆளுவது எவ்விதம் நடைபெறும்?