Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
வானதி மீண்டும் ஒரு முறை நினைவற்ற நிலையை அடைந்தாள். அவளுடைய கண்களும் மூடிக் கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாகச் சுய நினைவு வரத் தொடங்கியது. நாகலோகத்திலோ, தேவலோகத்திலோ, தான் இளவரசரை மணந்தது வெறும் பிரமை என்பதை உணர்ந்தாள். இளவரசரைப் பற்றிய துயரமான செய்தி கேட்டதையும், அதன் பேரில் தான் ஓடைக் கரையில் வந்து நின்றதையும், தலை சுற்றி நீரில் விழுந்ததையும் நினைவுபடுத்திக் கொண்டாள். இந்த நினைவுகள் அவளுக்கு எல்லையற்ற ஏமாற்றத்தை அளித்தன; நெஞ்சில் சுருக்கென்று ஈட்டி பாய்வது போன்ற வலியையும் அளித்தன. கண்களைத் திறக்க முயன்றாள், ஆனால் முடியவில்லை. தன்னைத் தண்ணீரிலிருந்து தூக்கிக் கரை சேர்த்தது யாராயிருக்கும்? இளைய பிராட்டியாகத்தான் இருக்க வேண்டும். சற்றுத் தூரத்தில் படகில் வந்து கொண்டிருந்த குந்தவை தேவியாகத்தான் இருக்க வேண்டும். தன்னை எதற்காக அவர் காப்பாற்றி இருக்க வேண்டும்? ஒரேயடியாக முழுகித் தொலைந்து போகும்படி விட்டிருக்கக் கூடாதா? கண்களைத் திறந்து பேசுவதற்கு முடிந்தவுடனே, “ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள்?” என்று இளைய பிராட்டியுடன் சண்டை பிடிக்க வேண்டும்! தம்முடைய அருமைத் தம்பியிடம் அவருடைய அன்பு இவ்வளவுதானா?…
இதோ இளையபிராட்டி பேசுகிறார். என்ன சொல்கிறார்? யாரிடம் சொல்கிறார்? கேட்கலாம்.
“மயக்கத்தில் ஏதேதோ பிதற்றுகிறாள்! இந்த மட்டும் உயிர் பிழைத்ததே பெரிய காரியம்! நம்முடைய படகு மட்டும் இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்திருந்தால்? இவள் ஓடையில் விழுந்தது நம் கண்ணில் படாமற் போயிருந்தால்? அதை நினைத்தாலே எனக்குக் கதி கலங்குகிறது!”