Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சிறுவன் கொடுத்த வாளை நந்தினி வாங்கிக் கொண்டாள். அதை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள். பின்னர் அச்சிறுவனையும் தூக்கி எடுத்து அவனையும் சேர்த்து மார்புடன் அணைத்துத் தழுவிக் கொண்டாள். அவளுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது.
மற்றவர்கள் சற்று நேரம் வரை இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள். ரவிதாஸன் முதலில் திகைப்பு நீங்கப்பெற்றுக் கூறினான்.
“தேவி! சக்கரவர்த்தி நம்முடைய கோரிக்கையை நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளாமல் தங்களிடம் வாளைக் கொடுத்து விட்டார். மறுபடியும் விளக்கமாகச் சொல்லி…”
நந்தினி அவனைத் தடுத்து நிறுத்தினாள்; தழுதழுத்த குரலில் கூறினாள். “இல்லை, ஐயா இல்லை! சக்கரவர்த்தி நன்றாய்ப் புரிந்து கொண்டுதான் வாளை என்னிடம் கொடுத்தார். என் கண்ணீரைப் பார்த்து நீங்கள் கலங்க வேண்டாம். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் படுகொலைக்குப் பழி வாங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை நினைத்துக் களிப்பு மிகுதியினால் கண்ணீர் விடுகிறேன்!”
“தேவி! யோசித்துப் பாருங்கள்! நாங்கள், இத்தனை பேர் ஆபத்துதவிப் படையினர் உயிரோடிருக்கும்போது…” என்று சோமன் சாம்பவன் தொடங்கியதை நந்தினி தடுத்து நிறுத்தினாள்.
“யோசிக்க வேண்டியதே இல்லை, அந்தப் பொறுப்பு என்னுடையதுதான். உங்களுக்கும் வேலையில்லாமற் போகவில்லை. உங்களில் பாதி பேர் சக்கரவர்த்தியைப் பத்திரமாகப் பஞ்ச பாண்டவர் மலைக்குக் கொண்டு போய்ச் சேருங்கள். மற்றவர்கள் கடம்பூருக்கு வாருங்கள். சம்புவரையன் மாளிகைக்குள் வரக்கூடியவர்கள் வாருங்கள் மற்றவர்கள் வெளியில் சித்தமாகக் காத்திருங்கள். வேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளுடன் காத்திருங்கள். காரியம் வெற்றிகரமாக முடிந்த பின் கூடுமானால் எல்லாரும் உயிருடன் தப்பித்துச் செல்ல வேண்டும் அல்லவா?” என்றாள் நந்தினி.