Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் ஆச்சாரிய பிக்ஷுவின் அறைக்குப் பக்கத்து அறையில் பொன்னியின் செல்வன் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். மூன்று நாள் அவனுக்குக் கடும் சுரம் அடித்துக் கொண்டிருந்தது; பெரும்பாலும் சுயப் பிரக்ஞையே இல்லாமலிருந்தது. இந்த நாட்களில் பிக்ஷுக்கள் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு வந்தார்கள். வேளைக்கு வேளை மருந்து கொடுத்து வந்தார்கள். அடிக்கடி வாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஜாக்கிரதையாகப் பார்த்து வந்தார்கள்.
இடையிடையே எப்போதாவது சுயநினைவு தோன்றிய போது, தான் இருக்குமிடத்தைப் பற்றி அவன் எண்ணிப் பார்க்க முயன்றான். அவனுக்கு எதிரில் சுவரில் எழுதியிருந்த சித்திரக் காட்சி அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அந்தச் சித்திரத்தில் தேவர்கள், கந்தவர்கள், யக்ஷர்கள் காணப்பட்டார்கள். அவர்களில் சிலர் பலவித இன்னிசைக் கருவிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வெண்சாமரங்களையும், வெண்கொற்ற குடைகளையும் ஏந்திக் கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் கரங்களில் பல வர்ணமலர்கள் உள்ள தட்டுக்களை ஏந்திக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி தத்ரூபமாக இருந்தது. தேவர்களின் உருவங்கள் எல்லாம் உயிர் உள்ள உருவங்களாகத் தோன்றின. அடிக்கடி அக்காட்சிகளைப் பார்த்த பிறகு பொன்னியின் செல்வன் வானவரின் நாட்டுக்குத் தான் வந்து விட்டதாகவே எண்ணினான். அந்தத் தேவ யட்ச கின்னரர்கள் எல்லாரும் தன்னை வரவேற்க வருவதாகவும் எண்ணினான். சொர்க்க லோகத்துக்குத் தான் வந்து சேர்ந்தது எப்படி என்று யோசித்தான். அடர்த்தியான தாழைப் புதர்களும், அத்தாழைப் புதர்களில் பூத்திருந்த தங்கநிறத் தாழம்பூக்களும் இருபுறமும் நிறைந்திருந்த ஓடையின் வழியாக வான நாட்டுக்குத் தான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த ஓடை வழி நினைவு வந்த போது தாழம்பூக்களிலிருந்து வந்த நறுமணத்தையும் அவன் நுகர்வதாகத் தோன்றியது. ஓடையில் ஒரு படகில் ஏற்றித் தன்னை ஒரு தேவகுமாரனும் தேவகுமாரியும் அழைத்து வந்ததும் இலேசாக நினைவு வந்தது. தேவகுமாரன் சிவபக்தன் போலிருக்கிறது. இனிமையான தேவாரப்பாடல்களை அவன் அடிக்கடி பாடினான். தேவகுமாரி என்ன செய்தாள்? அவள் பாடவில்லை. அவள் அவ்வப்போது இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே கூறினாள். அதுவே தேவகானம் போலிருந்தது. ஆர்வமும் அன்பும் நிறைந்த கண்களால் தன்னை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்விருவரும் இப்போது எங்கே?