Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
பழுவேட்டரையர் சிரித்தார். நந்தினியின் வார்த்தையைக் கேட்டுப் பரிகாசமாகச் சிரிப்பதாய் எண்ணிக் கொண்டு இலேசாகத்தான் சிரித்தார். அந்தச் சிரிப்பின் ஒலியால் அந்த அறையும் அதிலிருந்த சகல பொருள்களும் நடுநடுங்கின. தம்மை அவமதித்தவர்களை நந்தினி தன் கையினாலேயே கத்தி எடுத்துக் கொன்றுவிடுவதாகக் கூறியதைக் கேட்ட போது அவருடைய உள்ளத்தில் ஒரு பெருமிதம் உண்டாயிற்று. தம்முடைய மரியாதையைப் பாதுகாப்பதில் நந்தினிக்கு அவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை அறிந்ததில் பழுவேட்டரையருக்கு இறும்பூது ஏற்பட்டது. அதே தோரணையில் அவள் மேலும் பேசிக் கேட்க வேண்டுமென்ற ஆசை அவர் மனதில் ஒரு பக்கம் பெருகியது. மற்றொரு பக்கத்தில் அவள் அம்மாதிரியெல்லாம் பேசுவதைத் தாம் விரும்பவில்லை என்று காட்டிக் கொள்ளவும் ஆசைப்பட்டார்.
“ஐயா! ஏன் சிரிக்கிறீர்கள்! என் வார்த்தையில் அவநம்பிக்கையினால் சிரிக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
“தேவி! மந்தார மலரின் இதழைப் போல் மென்மையான உன் கையினால் கத்தியை எப்படி எடுப்பாய் என்று எண்ணிச் சிரித்தேன். மேலும் நான் ஒருவன் இரண்டு நீண்ட கைகளை வைத்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது..”
“ஐயா! தங்கள் கரங்களின் பெருமையையும் வலிமையையும் நான் அறிவேன். யானைத் துதிக்கையை யொத்த நீண்ட கைகள், இந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் போன்ற வலிமையுள்ள கைகள். போர்க்களத்தில் ஆயிரமாயிரம் பகைவர்களை வெட்டி வீழ்த்திய கைகள், சோழ சக்கரவர்த்திகளின் சிரத்தில் மணிமகுடத்தை வைத்து நிலைநாட்டிவரும் கைகள். ஆனாலும் அதையெல்லாம் இன்று நினைத்துப் பார்ப்பாரில்லை. நேற்றுப் பிறந்த பிள்ளைகள் தங்களைக் ‘கிழடு’ என்று சொல்லி ஏளனம் செய்யும் காலம் வந்து விட்டது. தாங்களோ மந்திரத்தால் கட்டுண்ட சர்ப்பராஜனைப் போல் சோழ குலத்தாரிடம் கொண்ட பக்திக்குக் கட்டுப்பட்டுச் சும்மா இருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய கரங்கள் வளையல் அணிந்த மென்மையான கரங்கள்தான். ஆனாலும் வீராதி வீரராகிய தங்களை அக்கினி சாட்சியாகக் கைப்பிடித்த காரணத்தினால் எனது கைகளுக்கும் சிறிது சக்தி ஏற்பட்டிருக்கிறது. என் கற்பைக் காத்துக் கொள்வதற்கும் என் கணவரின் மரியாதையை நிலை நிறுத்துவதற்கும் அவசியம் ஏற்படுமானால் என் கைகளுக்கும் கத்தி எடுக்கும் வலிமை உண்டாகி விடும். இதோ பாருங்கள்…!” என்று நந்தினி கூறிவிட்டு, மஞ்சத்துக்கு அடியிலிருந்த பெட்டியை வெளிப்புறமாக நகர்த்தினாள். பெட்டியைத் திறந்து அதன் மேற்புறத்தில் கிடந்த ஆடைகளை அப்புறப்படுத்தினாள். அடியில் தகதகவென்று பிரகாசித்துக் கொண்டிருந்த நீண்ட வாளை ஒரு கையினால் அலட்சியமாக எடுத்துத் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்தாள்……….