Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
ஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித்தையையே மறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா? அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, “கந்தமாறா! நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா? என்னைக் கொல்ல முயன்றாயா?” என்று கேட்டான். கந்தமாறன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. பிறகு அவன் வில்லை வளைக்கவே இல்லை.
ஏறக்குறைய சூரியன் உச்சி வானத்தை அடைந்த சமயத்தில் எல்லாரும் களைத்துப் போனார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வீடு திரும்பலாமே என்ற யோசனை எல்லாருடைய மனத்திலும் தோன்றியது. ஆனால் கரிகாலனோ களைத்துப் போன குதிரையை மேலும் காட்டு வழிகளில் செலுத்திக் கொண்டு போனான்…….