Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
இளவரசன் கரிகாலன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். இளம் பிராயத்து நினைவுகள் அவன் உள்ளத்தில் அலை அலையாக மோதிக் கொண்டு தோன்றி, குமுறிக் கொந்தளித்து விட்டுப் பிறகு வேறு நினைவுகளுக்கு இடங்கொடுத்து விட்டு மறைந்தன. அந்த நினைவு அலைகளைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி ஒரு தீர்க்கமான மூச்சு விட்டு விட்டுக் கரிகாலன்.
“போனதைப் பற்றி இப்போது பேசவேண்டாம்; நடக்க வேண்டியதைப் பற்றி பேசலாம். அதற்காகவே உன்னைத் தனியாக அழைத்து வந்தேன். பந்தயத்தில் நாம் தோற்று விட்டோ ம். பன்றி போய்விட்டது. இனி என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று யோசித்து முடிவு செய்யலாம். வல்லவரையா! நந்தினியிடம் அவளுக்கும் எனக்கும் உள்ள உறவை எப்படிச் சொல்வது என்று நினைத்தாலே எனக்குப் பீதி உண்டாகிறது. அவள் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. தப்பித் தவறிப் பார்க்கும் போதெல்லாம், வீர பாண்டியனுடைய உயிருக்காக அவள் மன்றாடிய போது எப்படி முகத்தை வைத்துக் கொண்டாளோ, அப்படியே வைத்துக் கொள்கிறாள். அவளுடைய பார்வை நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருக்கிறது. என் சகோதரி வீர பாண்டியன் மீது காதல் கொண்டு அவன் உயிருக்காக என்னிடம் மன்றாடினாள் என்பதை நினைத்தாலே என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது. வல்லவரையா! உன் கருத்து என்ன? இன்னமும் அவளுக்கு உண்மை தெரியாது என்றா நினைக்கிறாய்? அவள் சுந்தர சோழரின் மகள் என்றும், எங்களுக்கெல்லாம் சகோதரி என்றும் அறியமாட்டாள் என்றா கருதுகிறாய்?”
“கோமகனே! இவையெல்லாம் தெரிந்திருந்தால், இன்னமும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களுடன் சேர்ந்திருப்பாரா? சோழ குலத்துக்கு விரோதமாக ஒரு சிறுபிள்ளையைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய நாட்டு மன்னனாகவும் சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகவும் மணிமகுடம் சூட்டியிருப்பாரா? அந்த மணிமகுடத்தைத் தாங்கி நிற்பதாகக் கையில் கத்தி ஏந்திப் சபதம் செய்திருப்பாரா? இவையெல்லாம் திருப்புறம்பயம் பள்ளிப்படையருகில் நள்ளிரவில் நடந்ததை நானே பார்த்தேன்..”……..