Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் பொன்னியின் செல்வர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார். தஞ்சைக்குச் சென்று தந்தை தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. இலங்கையின் அரசைத் தாம் கவர எண்ணியதாகத் தம் மீது சாட்டப்பட்ட குற்றம் ஆதாரமற்றது என்று நிரூபிக்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையின் வாக்கை மீறி நடந்ததாகத் தம் மீது ஏற்படக்கூடிய அபவாதத்தைக் கூடிய விரைவில் போக்கிக் கொள்ளவும் அவர் விரும்பினார்…
சூடாமணி விஹாரத்தின் சுவர்களிலே தீட்டப்பட்டிருந்த அருமையான சித்திரக் காட்சிகளைப் பார்ப்பதில் சிறிது நேரம் சென்றது…
சீன தேசத்துக்குத் தெற்கே கடல் சூழ்ந்த பல நாடுகள் அந்நாளில் ஸ்ரீ விஜயம் என்னும் சாம்ராஜ்யத்தில் அடங்கியிருந்தன. அருமண நாடு, காம்போஜ தேசம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், மாபப்பாளம், மாயிருடிங்கம், இலங்கா சோகம், தாமரலிங்கம், இலாமுரி தேசம் முதலிய பல நாடுகளும் நகரங்களும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டோ , நேசப்பான்மையுடனோ இருந்து வந்தன. இவற்றுக்கெல்லாம் நடுநாயகமாகக் கடாரம் என்னும் மாநகரம் இணையற்ற சீர் சிறப்புகளுடனும் செல்வ வளத்துடனும் விளங்கி வந்தது…
அந்த நாடு நகரங்களைப்பற்றி விவரிக்கும்படி ஆச்சாரிய பிக்ஷுவுக்கு ஓய்வு கிடைத்த போதெல்லாம் பொன்னியின் செல்வர் அவரைக் கேட்டு வந்தார். அவரும் அலுப்புச் சலிப்பில்லாமல் சொல்லி வந்தார். அந்நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றியும் வர்த்தகப் பெருக்கத்தைப் பற்றியும் கூறினார். பொன்னும் மணியும் கொழித்துச் செந்நெல்லும் கரும்பும் செழித்துச் சோழ வள நாட்டுடன் எல்லா வகையிலும் போட்டியிடக் கூடிய சிறப்புக்களுடன் அந்நாடுகள் விளங்குவதைப் பற்றிக் கூறினார். பழைய காலத்திலிருந்து தமிழகத்துக்கும், அந்த நாடுகளுக்கும் உள்ள தொடர்புகளைப்பற்றிக் கூறினார். பல்லவ நாட்டுச் சிற்பிகள் அந்த தேசங்களுக்குச் சென்று எடுப்பித்திருக்கும் அற்புத சிற்பத்திறமை வாய்ந்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னார். தமிழகத்திலிருந்து சென்ற சித்திர, சங்கீத நாட்டிய கலைகள் அந்நாடுகளில் பரவியிருப்பதைப் பற்றியும் கூறினார். இராமாயணம், மகாபாரதம், முதலிய இதிகாசங்களும், விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருமால் ஆகிய தெய்வங்களும், புத்த தர்மமும் அந்த தேசத்து மக்களின் உள்ளங்களில் கலந்து குடிகொண்டிருப்பதையும், ஒன்றோடொன்று பிரித்து உணர முடியாதவர்களாக அந்நாட்டு மக்கள் எல்லாத் தெய்வங்களையும் வணங்கி வருவதையும் எடுத்துச் சொன்னார்.