Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“கிழவன் செத்துப் போய் விட்டான்!” என்றது ஒரு குரல்.
“நன்றாகப் பார்! பழுவேட்டரையனுடைய உயிர் ரொம்பக் கெட்டி யமன் கூட அவன் அருகில் வரப் பயப்படுவான்!” என்றது மற்றொரு குரல்.
“யமன் பயப்பட்டாலும் நரி பயப்படாது. கொஞ்ச நஞ்சம் உயிர் மிச்ச மிருந்தாலும் நரிகள் சரிப்படுத்திவிடும். பொழுது விடியும்போது கிழவனின் எலும்புகள்தான் மிச்சமிருக்கும்!”
“நல்ல சமயத்தில் நீ பிளந்த மண்டபத்தைத் தள்ளினாய். இல்லாவிடில் நான் அந்தக் கதியை அடைந்திருப்பேன். கிழவன் என்னைக் கொன்றிருப்பான்!”
“எங்கே? மண்டபத்தை நகர்த்த முடியுமா, பார்க்கலாம்!”
சற்றுப் பொறுத்து, “துளிகூட அசையவில்லை! ஒரு பகைவனுடைய பள்ளிப்படையைக் கொண்டு இன்னொருவனுக்கும் வீரக்கல் நாட்டி விட்டோ ம்” என்று கூறிவிட்டு மந்திரவாதி கலகலவென்று சிரித்தான்.
“சிரித்தது போதும், வா! படகு பிய்த்துக் கொண்டு ஆற்றோடு போய் விடப் போகிறது. அப்புறம் கொள்ளிடத்தைக் தாண்ட முடியாது!”
இதற்கிடையில் நரிகளின் ஊளைக் குரல் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. நரிகள் மூச்சு விடும் சத்தம் அவர் தலைக்கு அருகில் கேட்டது! ஆகா! இந்த நரிகளுக்குக் கூடவா பழுவேட்டரையனைக் கண்டு இளக்காரமாகப் போய்விட்டது? பார்க்கலாம் ஒரு கை! பழுவேட்டரையர் ஒரு கையினால் மட்டும் அல்ல, இரண்டு கைகளினாலும் பார்க்கத் தொடங்கினார்..