Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“ஐயா! தங்களுக்குத் தண்டனை கொடுக்கவோ, பிராயச்சித்தம் சொல்லவோ, நான் முற்பட மாட்டேன். தாங்கள் என் பாட்டனாரின் ஸ்தானத்தில் உள்ளவர். என் தந்தையின் போற்றுதலுக்கு உரியவர். உண்மையாகவே, தங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன்…”
“அப்படியானால், உடனே கேள் அம்மா! வெறும் பேச்சுப் பேசுவதற்கு இப்பொழுது நேரமில்லை.”
“கொடுப்பதாக வாக்கு அளியுங்கள்!”
“உனக்கும், உன் குடும்பத்துக்கும் நான் செய்து விட்ட துரோகத்துக்கு நான் கொடுக்கக் கூடியது எதுவும் ஈடாகாது. நீ எது கேட்டாலும் கொடுக்கிறேன். சீக்கிரம் கேள்!”
“இளையராணி நந்தினி தேவியைத் தாங்கள் ஒன்றும் செய்வதில்லை என்று வாக்கு அளிக்க வேண்டும். அதுதான் நான் கோரும் வரம்!”
“அம்மா! இது எது என்ன விளையாட்டா? விளையாட இதுதானா சமயம்? என் முதுமைப் பிராயத்தில் நான் புத்திகெட்டுப்போனது உண்மைதான். அதற்காக என்னை முழுப் பைத்தியக்காரனாக்கி விடப் பார்க்கிறாயா? அந்தச் சதிகாரிக்கு நான் தக்க தண்டனை கொடுக்காவிட்டால், மற்ற சதிகாரர்களை எப்படித் தண்டிக்க முடியும்? என் கையினால் அவளைக் கொன்றுவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன். என் மனத்திலுள்ளதையெல்லாம் சொல்லி விட்டு, இந்தக் கிழவனை அவளால் கடைசி வரையில் ஏமாற்ற முடியவில்லையென்பதை எடுத்துக் காட்டிவிட்டு, அவளை என் வாளினாலேயே வெட்டிக் கொல்லுவேன். அதற்குக் குறைந்த தண்டனை எதுவும் அவளுக்குக் கொடுத்தால் நியாயம் செய்தவனாக மாட்டேன். அதற்குப் பிறகு, எனக்கு என்ன நியாயமான தண்டனை என்பதையும் யோசிப்பேன். போ! அம்மா! போ! உன் தந்தையையும், தம்பியையும் இன்று வரப்போகும் கண்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு வேண்டிய பிரயத்தனம் செய்!…”
“செய்கிறேன், ஐயா! ஆனால் என் சகோதரியைப் பாதுகாக்கவும் முயற்சி செய்ய வேண்டாமா? இளைய ராணி நந்தினி என் சகோதரி. அவருக்குத் தாங்கள் என்ன தீங்கு செய்தாலும், அதுவும் சோழ குலத்துக்குச் செய்த துரோகமாகும்!”
பழுவேட்டரையர் எல்லைக் கடந்த திகைப்பில் ஆழ்ந்தார். “நான் இன்னமும் கனவு கண்டு கொண்டிருக்கிறேனா?” என்று அவர் உதடுகள் முணு முணுத்தன.
“இல்லை, இல்லை! தாங்கள் கனவு காணவில்லை. தாங்கள் காண்பதும் கேட்பதும் உண்மைதான். சிறிது யோசித்துப் பாருங்கள்; பழைய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். என் சகோதரன் அருள்மொழிவர்மனைக் காவேரியில் முழுகிப் போகாமல் ஒரு மாதரசி காப்பாற்றியது நினைவிருக்கிறதா? அவள்தான் இளையராணி நந்தினியின் தாயார். இளைய ராணியைத் தாங்கள் மணம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்த நாளில், என் தந்தை நினைவிழந்து விழுந்தது நினைவிருக்கிறதா? இளைய ராணியின் அன்னையைக் காண்பதாக நினைத்தே சக்கரவர்த்தி மூர்ச்சை அடைந்தார். அவள் இறந்து விட்டதாக வெகுகாலம் எண்ணிக் கொண்டிருந்தார். ஆகையால் திடீரென்று இளைய ராணியைப் பார்த்ததும் ஞாபகத்தை இழந்தார்…