Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“அச்சந்தர்ப்பத்தில் கொடும்பாளூர் இளவரசி இம்மாதிரி ஒரு சபதத்தைச் செய்வாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்டு அனைவரும் திகைத்துப் போனார்கள்.
இளையபிராட்டி கோபமும் பரிதாபமும் கலந்து பொங்கிய குரலில், “பெண்ணே! இது என்ன சபதம்? எதற்காகச் செய்தாய்? இப்படியும் ஒரு மூடத்தனம் உண்டா? ஏதோ வெறி பிடித்தவள் போல அல்லவா பிதற்றிவிட்டாய்?” என்றாள்.
“இல்லை, அக்கா! இல்லை! எனக்கு வெறி இல்லை. என் அறிவு தெளிவாயிருக்கிறது. பல நாளாக யோசித்து என் மனத்திற்குள் முடிவு செய்து வைத்திருந்ததையே இப்போது பலர் அறியக் கூறினேன்” என்றாள் வானதி.
அதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் பூங்குழலியின் சிரிப்பு அவள் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே இப்போது வெறி பிடித்துவிட்டது போலத் தோன்றியது. முதலில் கலகலவென்று சிரித்தாள். பிறகு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். பின்னர் திடீரென்று அழுகையை நிறுத்திவிட்டு மெல்லிய குரலில்,
அகக்கடல்தான் பொங்குவதேன்?”
என்று பாடத் தொடங்கினாள்.
குந்தவை ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “இந்த இரண்டு பெண்களும் சேர்ந்து என் மனத்தையும் குழப்பிப் பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. திருமலை! இளவரசரைப் பார்க்கப் புறப்பட்டவன் இவளை எதற்காக இங்கு அழைத்துக் கொண்டு திரும்பி வந்தாய்?” என்று கேட்டாள்.