Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“ஆனால் எனக்கு இன்றைக்குத்தான் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. தேவி! கொடும்பாளூர் இளவரசியின் ஜாதகப் பிரகாரம் அவருக்கு இன்று பெரிய கண்டம் வரவேண்டும். பழுவேட்டரையர் மூலம் அது வருமோ என்று நினைத்தேன். அப்படி வராமற் போகவே ஆச்சரியமடைந்தேன். வேறு விதமாகக் கண்டம் வந்தது. இளவரசி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைப்பார்! ஆகா! அவருடைய அபூர்வமான கை ரேகைகள்! அவர் விஷயமாக நான் சொல்லியிருப்பதெல்லாம் நிறைவேறும், அதைப் பற்றி சந்தேகமில்லை!” என்றார்.
“அழகாய்த்தானிருக்கிறது, அது எப்படி நிறைவேறும்? வானதி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தாலும் உம் ஜோசியம் நிறைவேறப் போவதில்லை. சற்றுமுன் உம்முடைய வீட்டில் அந்தப் பெண் செய்த சபதத்தை நீர் கேட்கவில்லையா?” என்றாள் குந்தவை.
“யார் என்ன சபதம் செய்தாலும், என் ஜோசியம் நிறைவேறியே தீரும். அப்படி நிறைவேறாவிட்டால், என்னிடமுள்ள ஜோதிட ஏடுகளையெல்லாம் காவேரி நதியில் எறிந்து விடுகிறேன்! இது என் சபதம்!” என்றார் ஜோதிடர்.
அப்போது ஆழ்வார்க்கடியான், “ஜோதிடரே! உமது ஏடுகளை நீரே எறியும் வரையில் காவேரி மாதா காத்திருக்கவில்லை. அவளே கொண்டுபோய் விட்டாள்!” என்றான்.
ஜோதிடர் அவன் கூறியதன் உண்மையை உணர்ந்து திகைத்து நின்றார். “ஆயினும், என் ஜோதிடம் பலிக்காமற் போகாது!” என்று தம் வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்..