Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“அதைப் பார்த்த வானதி, “ஐயோ! ஐயோ!” என்று சத்தமிட்டாள். அடுத்த கணத்தில் “என்ன? என்ன?” என்று ஒரு குரல் கேட்டது. யாரோ விரைந்து ஓடி வரும் காலடிச் சத்தமும் கேட்டது. வானதி அந்தப் பக்கம் பார்த்தாள். சற்று முன் நதி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாலிபன்தான் கரையேறி ஓடி வந்து கொண்டிருந்தான் என்பதை அவள் அறிந்தாள்.
அதே சமயத்தில் எங்கிருந்தோ இரண்டு பெரிய பறவைகள் வந்து விட்டன. கூட்டைச் சுற்றி அவை கராபுராவென்று கத்திக் கொண்டு வட்டமிட்டன. அவை அக்குஞ்சுகளின் தாயும் தகப்பனுமாகவே இருக்க வேண்டும். குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகவே அவை அவசரமாக வந்திருக்க வேண்டும் என்பதை வானதி உணர்ந்தாள். இரண்டும் நீள மூக்குகள் உள்ள பறவைகள். மரங்கொத்திப் பறவைகள் என்பவை இவைதாம் போலும். ஒரு பறவை கூட்டைச் சுற்றி அதிகமாக வட்டமிட்டது. இன்னொன்று பூனையை நெருங்கி அதை மூக்கினால் கொத்தித் தாக்கும் பாவனையுடன் சத்தமிட்டது! பூனையை அந்தப் பறவையினால் ஒன்றும் செய்துவிட முடியாது. பூனையின் வாயில் அகப்பட்டால் மறுகணம் அதன் வயிற்றுக்குள்ளேயே போய்விட வேண்டியதுதான். ஆயினும் தன் குஞ்சுகளைக் காப்பதற்காக அந்தப் பறவை அப்படித் தீரத்துடன் போராடியது. தாயையும் தகப்பனையும் இளம் பிராயத்திலேயே இழந்துவிட்ட வானதிக்கு அந்த காட்சி மிக்க மனக்கசிவை உண்டாக்கியது.”