Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
பூங்குழலி எவ்வளவு விரைவாக ஓடக் கூடியவளானாலும், மேலிருந்து எறியப்பட்ட வேலுடன் போட்டியிட முடியாதல்லவா? அவள் மந்தாகினி அத்தையின் அருகில் பாய்ந்து செல்வதற்குள் வேல் அத்தையின் விலாவில் பாய்ந்துவிட்டது. ‘வீல்’ என்று மற்றொரு முறை பயங்கரமாக ஓலமிட்டு விட்டு மந்தாகினி கீழே விழுந்தாள். அதே சமயத்தில் அந்த அறையிலிருந்த அத்தனை பேருடைய குரல்களிலிருந்தும் பரிதாப ஒலிகள் கிளம்பின.
பூங்குழலியைப் போலவே மற்றவர்களும் தரையில் விழுந்த மாதரசியை நோக்கி ஓடிவர ஆயத்தமானார்கள். அச்சமயம் மேல் மாடத்திலிருந்து தடதடவென்று சத்தம் கேட்டது. சில மண் பாண்டங்கள் கீழ் நோக்கிப் பல திசைகளிலும் எறியப்பட்டன.
அவற்றில் ஒன்று சக்கரவர்த்தியின் அருகில் சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த தீபத்தின் பேரில் விழுந்தது; தீபம் அணைந்தது. அறையில் உடனே இருள் சூழ்ந்தது. பிறகு சிறிது நேரம் அந்த அந்தப்புர அறையிலும் அதைச் சுற்றியுள்ள நீண்ட தாழ்வாரங்களிலும் ஒரே குழப்பமாயிருந்தது. திடுதிடுவென்று மனிதர்கள் அங்குமிங்கும் வேகமாக ஓடும் காலடிச் சத்தங்கள் கேட்டன.
“விளக்கு! விளக்கு!” என்று சின்னப் பழுவேட்டரையர் கர்ஜனைக் குரல் அலறியது.
“ஆகா! ஐயோ!” என்று ஒரு பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. அது மகாராணியின் குரல் போலிருக்கவே எல்லாருடைய நெஞ்சங்களும் திடுக்கிட்டு, உடல்கள் பதறின. இத்தனை குழப்பத்துக்கிடையே பூங்குழலி அவளுடைய அத்தை மந்தாகினி விழுந்த இடத்தைக் குறி வைத்து ஓடி அடைந்தாள். அத்தையை அவளுக்கு முன் யாரோ தூக்கி மடியின் மேல் போட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
…ஆயினும், சுந்தர சோழர் விம்மி அழுவது நின்ற பாடில்லை. மந்தாகினியின் மரணத்துக்காகத்தான் அழுதாரா? அல்லது அதே சமயத்தில் வெகு தூரத்தில் நடந்த இன்னொரு துயர சம்பவத்தின் அதிர்ச்சி அவர் உள்ளத்தில் தோன்றியதனால் அழுதாரா என்று சொல்ல முடியுமா?