Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
சென்ற அத்தியாயத்தில் கூறிய நிகழ்ச்சிகளோடு இந்தக் கதையை முடித்துவிடக் கூடுமானால், எவ்வளவோ நன்றாயிருக்கும். நேயர்களில் சிலர் ஒருவேளை அவ்விதம் எதிர் பார்க்கவுங்கூடும். ஆனால் அது இயலாத காரியமாயிருக்கிறது. அதே தினத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் கடம்பூர் சம்புவரையரின் மாளிகையில் நடந்த பயங்கர நிகழ்ச்சியைப் பற்றி நாம் இனிச் சொல்ல வேண்டியிருக்கிறது..
“ஆகா! நீ வந்துவிட்டாயா? வா! வா! சரியான சமயத்திலேதான் வந்தாய்! என் அன்பே! என் அரசே! வா! வீர பாண்டியன் தலையே! ஏன் கூரை ஓரத்திலேயே இருக்கிறாய்? இறங்கி வா! இங்கே யாரும் இல்லை! உன் அடியாளைத் தவிர வேறு யாரும் இல்லை! ஏன் இப்படி விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்! ‘இந்தக் கண்டத்துக்குத் தப்பி உயிர் பிழைத்தால் உன்னைப் பாண்டிய சிங்காசனத்தில் ஏற்றி வைப்பேன் என்று சொன்னாயே! அதை நான் மறக்கவில்லை. உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறக்கவில்லை. அதை நினைவேற்றும் வேளை நெருங்கிவிட்டது. அதற்காக நான் எத்தனைக் காலம் பொறுமையாகக் காத்திருந்தேன்! என்னென்ன வேஷங்கள் போட்டேன்? – எல்லாம் நீ பார்த்துக் கொண்டுதானிருந்தாய்! இப்போது பார்த்துக் கொண்டிரு! கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிரு. நீதான் கண் கொட்டுவதே கிடையாதே! நானும் கண்ணை மூடித் தூங்க முடியாமல் செய்து வருகிறாய்! இன்று இரவு உனக்குப் பழி வாங்கி விட்டேனானால், அப்புறமாவது என்னைத் தூங்கவிடுவாய் அல்லவா?… மாட்டாயா?
“இதோ போகிறேன், அக்கா! எப்படியாவது அவரை அழைத்துக் கொண்டுதான் திரும்பி வருவேன்” என்று சொல்லி விட்டு மணிமேகலை சென்றாள்.
அவளுடைய காலடிச் சத்தம் மறைந்ததும், பக்கத்திலிருந்த வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.
நந்தினி இரகசியக் கதவின் அருகில் சென்று, அதன் உட்கதவைத் திறந்தாள்.
இருட்டில் ஒரு கோரமான முகம் இலேசாகத் தெரிந்தது.
“மந்திரவாதி! வந்துவிட்டாயா?” என்றாள் நந்தினி.
“வந்துவிட்டேன், ராணி! வேளையும் வந்துவிட்டது” என்றான் ரவிதாஸன்.