Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
“கரிகாலருடைய வெறி கொண்ட சிரிப்பு அடங்கிய பிறகு, அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர்ந்தது.
“ஐயா! என் வாழ்நாளில் தங்களுக்கு மகிழ்ச்சி தரும்படியான காரியம் எதுவும் நான் செய்ததில்லை. சாகும் சமயத்திலாவது தாங்கள் சிரித்து மகிழுவதற்குக் காரணமானது பற்றிச் சந்தோஷம்” என்றாள் நந்தினி.
“ஆம், நந்தினி! இன்றைக்கு எனக்கு மிகச் சந்தோஷமான தினந்தான். இத்தனை வருஷமாக நீ என்னைப் படுத்திவைத்த பாட்டுக்கெல்லாம் இன்றைக்கு முடிவு ஏற்படப் போகிறது. இந்தத் தடவை நான் காஞ்சியிலிருந்து புறப்பட்டபோது ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டுதான் வந்தேன். உன்னை நேரில் பார்த்த பிறகு ஒருவேளை என் மனம் சலித்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். அதற்கிடமில்லாமல், நீயே வாளை என் கையில் கொடுத்து விட்டாய்!” என்று கூறிக் கரிகாலன் மீண்டும் சிரித்தான்.
“கோமகனே! எனக்கும் இன்று சுதினந்தான். தங்கள் கையினால் வெட்டுண்டு இறப்பதைப் போன்ற இனிமையான மரணம் எனக்குக் கிட்டப் போவதில்லை. ஒரு காலத்தில் தாங்கள் என் கழுத்தில் பூமாலை சூட்டப் போகிறீர்கள் என்று ஆசைக் கனவு கண்டுகொண்டிருந்தேன். அது நிறைவேற முடியாமற் போயிற்று. தங்கள் கையிலுள்ள வாளை என் கழுத்தில் சூட்டிக் கொள்ளும் பேறாவது எனக்குக் கிடைக்கட்டும். ஐயா! நேரம் ஆகிறது, ஏன் தாமதிக்கிறீர்கள்?” என்றாள் நந்தினி