Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
இளவரசர் புத்த பிக்ஷுவையும் தூக்கிக்கொண்டு முருகய்யன் கொண்டு வந்து நிறுத்திய படகிலே குதித்தார். அவர் குதித்த வேகத்தில் அந்தச் சிறிய படகு பேயாட்டம் ஆடியது. ஒரு கணம் கவிழ்ந்து விடும் போலவும் இருந்தது. முருகய்யன் மிகப் பிரயத்தனப்பட்டுப் படகு கவிழாமல் காப்பாற்றினான்.
“முருகையா! இனிமேல் படகைவிடு! ஆனைமங்கலம் அரண்மனைக்கு விடு!” என்று பொன்னியின் செல்வர் உரத்த குரலில் கூவினார். அச்சமயம் உச்சநிலையை அடைந்திருந்த புயற்காற்றும், புயலில் பொங்கி வந்த கடலும் போட்ட இரைச்சலினால் அவர் கூறியது முருகய்யன் காதில் விழவில்லை. ஆயினும் இளவரசரின் முகத்தோற்றத்திலிருந்து அவருடைய விருப்பத்தை அறிந்து கொண்ட முருகய்யன் படகைச் செலுத்தத் தொடங்கினான்