Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
வானதி, அன்றைக்குத் திடீரென்று இளைய பிராட்டியை நெருங்கி, “அக்கா! அக்கா! தங்களைப் பார்ப்பதற்காக ஒரு பெண் வந்திருக்கிறாள். கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். பார்த்தால் பரிதாபமாயிருக்கிறது!” என்று சொன்னதும் குந்தவைக்கே சிறிது வியப்பாகப் போய்விட்டது.
“அவள் யார்? என்ன விஷயம் என்று நீ கேட்கவில்லையா?” என்றாள்.
“கேட்டேன், அக்கா! அதைச் சொன்னால் தங்களுக்கு எரிச்சல் வருமோ, என்னமோ! சம்புவரையர் மகள் மணிமேகலையாம்! சின்னப் பழுவேட்டரையர் மாளிகையில் சம்புவரையர் குடும்பத்தைச் சிறை வைத்திருக்கிறார்கள். இவள் ஒருவருக்கும் தெரியாமல் வழி விசாரித்துக் கொண்டு ஓடி வந்திருக்கிறாள். என்ன காரியம் என்று கேட்டால், தங்களிடம் நேரிலேதான் சொல்வேன் என்கிறாள். அவளுடைய கண்ணீர் ததும்பிய முகத்தை நீங்கள் பார்த்தால் உடனே உங்களுடைய மனம்கூட மாறிவிடும்!” என்றாள் வானதி.
“அப்படியானால், என் மனம் கல்மனம் என்றா சொல்கிறாய்?” என்றாள் குந்தவை கோபமாக.
“தங்களுக்கு உண்மையிலேயே கல்மனம்தான். அக்கா! இல்லாவிட்டால், வந்தியத்தேவரைப் பாதாளச் சிறையில் விட்டுவிட்டுச் சும்மா இருப்பீர்களா?” என்றாள் வானதி.
“சரி, சரி, அந்தப் பெண்ணை இங்கே வரச் சொல்!” என்றாள் குந்தவை.
வானதி மானைப்போல் குதித்தோடி, மறுநிமிடம் மணிமேகலையை அழைத்துக் கொண்டு வந்தாள்.