Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
“வானதி! அது என்னவென்று பார்! சக்கரவர்த்தியின் மனோ நிலையையும் உடல் நிலையையும் கூட இந்த ஜனங்கள் மறந்து விடுகிறார்கள்! இப்படி ஆரவாரம் செய்கிறார்கள்!” என்றாள்.
வானதி அரண்மனையில் முகப்பில் சென்று எட்டிப் பார்த்து விட்டு உடனே அவசரமாகத் திரும்பி வந்தாள்.
மிகுந்த பரபரப்புடன், “அக்கா! அவர் வந்து கொண்டிருக்கிறார்!” என்றாள்.
“அவர் என்றால் யார்?” என்று புன்னகையுடன் கேட்டாள் குந்தவை.
“அவர்தான், அக்கா! உங்கள் தம்பி!”
உடனே குந்தவை, “சரி அப்படியானால் நீ இந்தப் பெண்ணைச் சற்று அப்பால் அழைத்துக் கொண்டு போ!” என்று சொன்னாள்.
வானதி தயங்குவதைப் பார்த்துவிட்டு, “சீக்கிரம் போ! உன்னைப் பார்க்காமல் அவன் போய்விட மாட்டான். நான் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன்” என்றாள் இளைய பிராட்டி குந்தவை.
வானதி மணிமேகலையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அப்பால் சென்றதும், பொன்னியின் செல்வன் அந்த இடத்துக்கு வந்தான்.
“தம்பி! இது என்ன நீ போகுமிடமெல்லாம் ஜனங்கள் கூடிக் கூச்சல் போடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களை அரண்மனை வாசலுக்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டாயே! மனம் புண்ணாகி வேதனையில் ஆழ்ந்திருக்கும் சக்கரவர்த்தியின் காதில் இந்த ஜனங்களின் கூச்சல் விழுந்தால் அவருக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்?” என்றாள்..