Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
இரண்டாவது தடவை பினாகபாணி வந்தபோது இருவரும் முன் ஜாக்கிரதையாக இருந்தார்கள். பைத்தியக்காரனிடம் முத்திரை மோதிரத்தைக் காட்டி அவனுடைய இரகசியத்தைச் சொல்லும்படி வைத்தியர் மகன் கேட்டுக் கொண்டிருந்த போது, வந்தியத்தேவன் இரண்டு அறைகளுக்கும் நடுவில் சுவரில் ஏற்கெனவே செய்திருந்த துவாரத்தின் வழியாக ஓசைப்படாமல் புகுந்து அந்த அறைக்குள்ளே வந்தான். பினாகபாணி திரும்பி அவனைத் தாக்கவே, இருவரும் துவந்த யுத்தம் செய்தார்கள். வேறு சமயமாயிருந்தால் வந்தியத்தேவன் வைத்தியர் மகனை ஒரு நொடியில் வென்று வீழ்த்தியிருப்பான். மேலே நெருப்புச் சுட்ட புண்கள் இன்னும் நன்றாக ஆறாதபடியாலும், காளாமுக ராட்சதன் அவனுடைய தொண்டையைப் பிடித்து அமுக்கிய இடத்தில் இன்னும் வலித்துக் கொண்டிருந்தபடியாலும் துவந்த யுத்தம் நீடித்தது. அச்சமயத்தில் பைத்தியக்காரன் கையில் சங்கிலியுடன் வந்து பினாகபாணியின் கழுத்தில் போட்டு இறுக்கினான். பினாகபாணி கீழே விழுந்தான்.
பிறகு, இருவருமாக அவனை அந்த அறையின் சுவர்களில் இருந்த இரும்பு வளையங்களுடன் சேர்த்துக் கட்டினார்கள். அப்படிக் கட்டும் போதே வந்தியத்தேவன், “பினாகபாணி! நாம் இருவரும் சக்கரவர்த்தியைக் குணப்படுத்துவதற்காகச் சஞ்சீவி மூலிகையைத் தேடி ஈழ நாட்டுக்குப் போனோமே, நினைவு இருக்கிறதா? அப்போது நாம் சஞ்சீவி கொண்டு வருவதில் வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது எங்களுக்குச் ‘சமய சஞ்சீவி’யாக வந்து சேர்ந்தாய்! இந்த உதவிக்காக மிக்க வந்தனம். வைத்தியர் மகனாகிய நீ இனிமேல் வைத்தியத்துடன் நிற்பது நல்லது. ஒற்றன் வேலையில் தலையிட்டு ஏன் வீணாகக் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறாய்?” என்று சொன்னான்.
பினாகபாணி அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. திடீரென்று நேர்ந்த இந்த விபத்தினால் அவன் பேச்சிழந்து நின்றான். ஆனால் அவனுடைய கண்கள் மட்டும் கோபக் கனலைக் கக்கின என்பது அவன் கொண்டு வந்து கீழே போட்டிருந்த தீவர்த்தி வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. பின்னர் இருவரும் வைத்தியர் மகன் கொண்டு வந்திருந்த அதிகார முத்திரையைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பினாகபாணி தலையில் சுற்றியிருந்த துணியை எடுத்து வந்தியத்தேவன் தன் தலையில் சுற்றிக் கொண்டான்.