Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
“வந்தியத்தேவன் சிறிது நேரம் வாசற்படிக்கருகில் கவலையுடன் தயங்கி நின்றான். புலிகளைப் பார்த்த வண்ணம் மீசையில் கையை வைத்து முறுக்கிக் கொண்டு நின்ற காவலன் மீது பாய்ந்து அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு மேலே போகலாமா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் புலிக் கூண்டுகளுக்கு அப்பால் அடுத்த வாசற்படிக்கருகில் மற்றும் இரு காவலர்கள் நிற்பது தெரிந்தது. அவர்களில் ஒருவன் இந்தக் காவலனுக்கு ஏதோ சமிக்ஞையினால் தெரிவித்து விட்டு அப்பால் போனான். ஒருவேளை தன்னைப் பற்றித்தான் அவர்கள் ஜாடையாகப் பேசிக் கொள்கிறார்களோ? இந்தக் காவலனைத் தாக்கி வீழ்த்திவிட்டுப் போனாலும், அப்பால் இது போன்ற பல வாசற்படிகளும் அவற்றில் காவலர்களும் இருப்பார்கள். அவர்களையெல்லாம் சமாளித்துவிட்டுத் தப்பிச் செல்ல முடியுமா? அதைக் காட்டிலும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று புலிக் கூண்டுகளைத் திறந்து விட்டால் என்ன? அப்போது ஏற்படக் கூடிய குழப்பத்தில் தப்பிச் செல்வது எளிதாக இருக்கும் அல்லவா?…
இப்படி அவன் எண்ணியபோது காவலன், “ஓகோ! தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயோ?” என்று கூறியதைக் கேட்டு வந்தியத்தேவன் ஒரு கணம் திடுக்கிட்டான்.
புலிகளில் ஒன்று உறுமியது. “அட நாயே! சும்மாக் கிட!” என்று அதட்டினான் காவற்காரன்.
அவன் புலியுடன் பேசுகிறான் என்று அறிந்ததும் வந்தியத்தேவன் சிரித்தான். காவற்காரன் திரும்பிப் பார்த்தான்.