Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
கரிய திருமால் என்னும் கருத்திருமன் கோடிக்கரைக்குச் சிறிது வடக்கே கடற்கரை ஓரத்தில் உள்ள தோப்புத்துறை என்னும் ஊரினன். அங்கிருந்து ஈழத் தீவுக்குப் படகு செலுத்திப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான்.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவன் ஒரு முறை ஈழத்திலிருந்து தோப்புத்துறைக்கு வந்துகொண்டிருந்த போது புயல் அடித்துக் கடல் கொந்தளித்தது. படகு கவிழாமல் கரையில் கொண்டு வருவதற்கு மிகவும் பிரயாசைப்பட்டான். கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் அருகில் வந்து அவன் கரையை நெருங்கிய போது ஒரு பெண் அக்கொந்தளித்த கடலில் மிதப்பதைக் கண்டான். அவள் பேரில் இரக்கம் கொண்டு படகில் ஏற்றிப் போட்டுக் கொண்டான். அவள் அப்பொழுது உணர்வற்ற நிலையில் இருந்தாள்.
உயிர் இருக்கிறதா, இல்லையா என்று கூடக் கண்டுபிடிக்க இயலவில்லை. அங்கேயே படகைக் கரையேற்றப் பார்த்தும் முடியவில்லை. காற்று அடித்த திசையில் படகைச் செலுத்திக் கொண்டு போய்க் கடைசியில் திருமறைக்காடு என்னும் ஊர் அருகில் கரையை அடைந்தான். உணர்வற்ற அந்தப் பெண்ணைக் கரையில் தூக்கிக் கொண்டு வந்து போட்டுக் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தபோது குதிரைகள் மேலேறிச் சில பெரிய மனிதர்கள் அப்பக்கம் வந்தார்கள். ஆனால் அவள் பேசவும் இல்லை. மற்றவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்ததாகவும் தெரியவில்லை. “இவள் பிறவி ஊமைச் செவிடு” என்று அவர்களில் ஒருவர் கூறினார். அவர்களின் தலைவராகத் தோன்றியவர் கருத்திருமனைத் தனியே அழைத்து ஒரு விந்தையான செய்தியைக் கூறினார். புயல் அடங்கியதும் அந்தப் பெண்ணை ஈழ நாட்டுக்கு அழைத்துச் சென்று அந்த நாட்டிலோ அல்லது அருகில் உள்ள தீவு ஒன்றிலோ விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்றும், அதற்காகப் பெரும் பணம் தருவதாகவும் அவர் சொன்னார். அதன்படியே கருத்திருமன் ஒப்புக்கொண்டு பணமும் பெற்றுக் கொண்டான். கடலில் கொந்தளிப்பு அடங்கியதும் அவளைப் படகில் ஏற்றி அழைத்துச் சென்றான்.
கடல் நடுவில் கட்டை ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒருவன் மிதப்பதைக் கண்டான். மிகவும் களைத்துப் போயிருந்த அவனையும் படகில் ஏற்றிக் கொண்டான். முதலில் அந்தப் பெண் புதிய மனிதனைக் கண்டு மிரண்டாள். பிறகு, அவனைக் கவனியாமலிருந்தாள். இருவரையும் அழைத்துக் கொண்டுபோய் அவன் ஈழ நாட்டுக்கு அருகில் உள்ள ஒரு தீவில் இறக்கிவிட்டான்.