Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
“விரோதி அல்லவென்றால், பின்னே நீ யார்? என் நண்பனா?” என்று மதுராந்தகன் கேட்டான்.
“ஆம், ஐயா! நண்பன்தான்!”
மதுராந்தகன் குரோதமும், துயரமும் ததும்பிய குரலில் மெல்லிய சிரிப்புச் சிரித்துவிட்டு, “நல்ல நண்பன் கிடைத்தாய்! உலகமே என்னைவிட்டு நழுவிச் செல்லும்போது, நீயாவது கிடைத்தாயே!” என்றான்.
“ஆம், ஐயா! உலகத்தில் யாரும் தங்களுக்குச் செய்ய முடியாத உதவியைத் தங்களுக்கு நான் செய்ய முடியும்!” என்றான் கருத்திருமன்.
“அது என்ன, சொல்லு பார்க்கலாம்! நேரமாகிவிட்டது சொல்லுவதைச் சீக்கிரம் சொல்லு!”
“எதற்கு நேரம் ஆகிவிட்டது?” என்று கருத்திருமன் கேட்டு விட்டு, மதுராந்தகனை உற்று நோக்கினான்.
“அரண்மனைக்குப் போவதற்குத்தான், வேறு எதற்கு?”
“தங்களுக்கு உரிமை இல்லாத அரண்மனைக்குத் தாங்கள் திரும்பிப் போகப் போகிறீர்களா?”
மதுராந்தகன் மறுபடியும் அதிர்ச்சி அடைந்து, “அடே! என்ன சொல்லுகிறாய்? உனக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? விரைவிலே சொல்லு! இல்லாவிடில்…” என்று கையிலிருந்த குத்துவாளை ஓங்கினான்.
“ஐயா! வாளை ஓங்க வேண்டாம். தங்கள் பகைவர்கள் எதிர்ப்படும்போது உபயோகிப்பதற்குத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். சற்று முன் தாங்களும், தங்களை வளர்த்த பெரிய மகாராணியும் இந்த மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் மரத்தின் பின்னால் நின்றதை நீங்கள் இருவரும் கவனிக்கவில்லை…