Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
ஆழ்வார்க்கடியானை வந்தியத்தேவன் கட்டிப்போட்ட படகு ஆற்றோட்டத்தோடு சிறிது தூரம் மிதந்து சென்று கரையிலே ஒதுங்கியது. ஆற்று வெள்ளத்தில் தள்ளப்பட்ட வீரர்கள் இருவரும் தட்டுத்தடுமாறிக் கரை சேர்ந்து அந்தப் படகு ஒதுங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஆழ்வார்க்கடியான் படகிலிருந்து இறங்கவில்லை. அவன் படகிலே கட்டுப்பட்ட மாதிரியே இருந்துகொண்டு மற்றவர்களை மறைவில் இருக்கும்படி சொன்னான்.
உண்மையென்னவென்றால், வந்தியத்தேவனும் கருத்திருமனும் தப்பித்துப் போய்விட வேண்டுமென்பதே ஆழ்வார்க்கடியானுடைய நோக்கமாயிருந்தது. முதல் மந்திரியின் விருப்பமும் அதுவே என்பதை அவன் தெரிந்து கொண்டிருந்தான். அவ்விருவரும் அச்சமயம் தஞ்சையில் இருப்பதால், பழைய சம்பவங்கள் பலவற்றைக் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டியதாக ஏற்படும். வந்தியத்தேவனை குற்றமற்றவன் என்பதுபற்றி முதன்மந்திரிக்கும், ஆழ்வார்க்கடியானுக்கும் சந்தேகமே இல்லை. ஆயினும் அவன் மீது விசாரணை நடத்துவதனாலேயே பல சங்கடங்கள் ஏற்படும். பலர் மனவருத்தம் அடையும்படி நேரிடும். அந்தப் பேச்சு மக்களின் காதுக்கு எட்டும்படி செய்வதே கேடாக முடியும்.