Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
“வைஷ்ணவனே! சிவபெருமானைப் பழித்த பாதகனாகிய நீ இந்த உலகில் இனி ஒரு கணமும் இருக்கலாகாது. மேலே ஒரு அடி எடுத்து வைத்தாயானால், உடனே வைகுண்டம் போய்ச் சேருவாய்!” என்றாள்.
“தாயே! மகா சக்தி! உன்னுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா? வைகுண்ட பதவி கிடைப்பது எளிதன்று. உன் கையால் என்னை அங்கே அனுப்பிவிட்டாயானால், அதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு என்ன கிடைக்கக் கூடும்?” என்றான் ஆழ்வார்க்கடியான்.
இச்சமயத்தில் சேந்தன் அமுதன் கட்டிலிலிருந்து எழுந்து வந்து, “பூங்குழலி! வேண்டாம்! கத்தியை இடுப்பில் செருகிக் கொள்! இந்த வைஷ்ணவன் சிவனைத் தூஷித்ததினால் சிவபெருமானுக்குக் குறைவு ஒன்றும் வந்துவிடாது. தீய வழியினாலும் நல்லது ஏற்படாது. பொய்மையினாலும் மோசத்தினாலும் நன்மை எதுவும் கிட்டாது. இந்த வைஷ்ணவனிடம் உண்மையைச் சொல்லி உதவி கேட்போம். இவனும் வந்தியதேவனுக்குச் சிநேகிதன்தானே!” என்றான்.
“அப்படி வாருங்கள் வழிக்கு! கபட நாடக சூத்திரதாரியான கிருஷ்ண பரமாத்மாவின் அடியார்க்கு அடியேனைக் கேவலம் சிவபக்தர்களால் ஏமாற்ற முடியுமா? கருணாமூர்த்தியான ஸ்ரீமந் நாராயணனைச் சரணாகதி என்று அடைந்தால், அவர் அவசியம் காப்பாற்றி அருளுவார். ஆதிமூலமே என்று கதறிய கஜேந்திரனை முதலை வாயிலிருந்து காப்பாற்றிய பெருமான் அல்லவோ எங்கள் திருமால்!…”
“ஆமாம்; ஆமாம்! உங்கள் திருமால் வைகுண்டத்திலிருந்து வந்து சேருவதற்குள் உங்கள் சிநேகிதர் இந்த மண்ணுலகிலிருந்தே போய்விடுவார்!” என்று பூங்குழலி சொல்லிவிட்டுக் கட்டிலை நோக்கி விரைந்து சென்றாள்.