ஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே “பெண்ணே! என்ன உளறுகிறாய்? உனக்குப் பைத்தியமா?” என்றான்.
“எனக்கு ஒன்றும் பைத்தியமில்லை. உனக்குப் பைத்தியம், உன் அப்பனுக்குப் பைத்தியம், உன் பாட்டனுக்குப் பைத்தியம். உனக்கு இவரை அடையாளம் தெரியவில்லை? ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று தெரியவில்லையா? சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு மக்களின் கண்ணின் மணியானவரை, காவேரித்தாய் காப்பாற்றிக் கொடுத்த தவப் புதல்வரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா? அப்படியானால், இவரோடு எதற்காக நீ புறப்பட்டாய். எங்கே போகப் புறப்பட்டாய்?” என்றாள் ராக்கம்மாள்.
இளவரசர் இப்போது குறுக்கிட்டு, “பெண்ணே! நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்! உன்னோடு அழைத்துக்கொண்டு போ! வீண் கூச்சல் போடாதே!” என்றார்.
இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டார்கள். கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாரும் இளவரசரை உற்றுப் பார்க்கலானார்கள்.