அத்தியாயம் 74 – “நானே முடி சூடுவேன்!” (PS-5)

  Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”

“இளவரசே! ஒரே ஒரு மனிதர் மனசு வைத்தால் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்லி என்னைக் குற்றமற்றவன் ஆக்கலாம். அந்த ஒருவர் பெரிய பழுவேட்டரையர்தான். கடம்பூர் மாளிகையில் யாழ்க் களஞ்சியத்தில் ஒளிந்திருந்த என்னைத் திடீரென்று கழுத்தைப் பிடித்து இறுக்கிக் கீழே தள்ளி மூர்ச்சை அடைந்து விழச் செய்தவர் அந்த வீரப் பெருமகனாராகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். வேறு யாரும் அங்கு அச்சமயம் வந்திருக்க முடியாது.

நந்தினிதேவி பேரில் சந்தேகங்கொண்ட அந்தக் கிழவர்தான் அவ்வாறு காளாமுகச் சைவராக உருக்கொண்டு மறைவிடத்திலிருந்து அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வந்திருக்க வேண்டும். காளாமுகச் சைவக்கூட்டத்தைச் சேர்ந்த இடும்பன்காரி அவருக்கு இரகசிய வழியில் வருவதற்கு உதவி செய்திருப்பான். ஆனால் அந்த மாபெரும் வீரருக்கு என்னை முதன் முதல் பார்த்தபோதே என்மீது வெறுப்பு உண்டாகிவிட்டது. அந்த வெறுப்பு பிறகு நாளுக்குநாள் அதிகமாகியே வந்தது. அவர் என் உயிரைக் காப்பாற்றுவதற்காக முன் வந்து அங்கு உண்மையில் நடந்ததைச் சொல்லப் போவதில்லை. நான் இந்தப் பயங்கரமான பழி பூண்டு இறந்தால் அவருக்கு ஒருவேளை சந்தோஷமாகவே இருக்கும். ஆகையால்,

இளவரசே! எனக்குத் தப்பிச் செல்வதற்கு அனுமதி கொடுங்கள்! முடிந்தால் நான் ஈழ நாடு சென்று அங்கே பாண்டிய குலத்து மணிமுடியையும், இரத்தின ஹாரத்தையும், தேடிக் கண்டுபிடிப்பேன். அல்லது இங்கேயே உங்கள் கை வாளால் என்னைக் கொன்றுவிடுங்கள். என்னிடம் அளவிலாத அன்பு வைத்திருந்த தங்கள் தமையனாரைக் கொன்ற பழியைச் சுமந்து நாற்சந்தியில் கழுவில் ஏற்றப்படும் கதிக்கு என்னை ஆளாக்காதீர்கள்! அதைக் காட்டிலும் தங்கள் கை வாளினால் இறப்பது எனக்கு எவ்வளவோ ஆறுதல் அளிக்கும்! அல்லது இந்தக் கொடும்பாளூர்க் கோமகளின் கையினால் நஞ்சுண்டு இறந்தாலும் பாதகமில்லை. இவரும் தங்கள் திருத்தமக்கையுமே இந்த அனாதையின் பேரில் கருணை கொண்டு யமலோகத்தின் வாசற்படி வரைக்கும் சென்றிருந்தவனைத் திரும்பவும் இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இதற்காக இவர்களுக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *