Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“பழுவேட்டரையரின் உள்ளத்திலும் அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்துச் சுழன்று கொண்டிருந்தது. நந்தினியின் எதிரில் இருக்கும்போது அவருடைய அறிவு மயங்கிப் போவது சாதாரண வழக்கம். அவள் கூறுவதெல்லாம் சரியாகவே அவருக்குத் தோன்றும். வாழ்நாளெல்லாம் தமக்குப் பிடிக்காமலிருந்த ஒரு காரியத்தை நந்தினி சொல்லும்போது அது செய்வதற்குரியதாகவே அவருக்குத் தோன்றிவிடும். ஏதேனும் மனதில் சிறிது சந்தேகமிருந்தாலும் அவருடைய வாய், “சரி சரி! அப்படியே செய்வோம்” என்று கூறிவிடும். சொல்லிய பிறகு, வாக்குத் தவறி எதுவும் செய்வதற்கு அவர் விரும்புவதில்லை.
இப்போதும் அவரைத் தஞ்சைக்குப் போய் மதுராந்தகரை அழைத்து வரும்படி நந்தினி சொன்னபோது சரி என்று ஒத்துக்கொண்டு விட்டார். பிரயாணம் கிளம்பிய பிறகு அது சம்பந்தமாகப் பற்பல ஐயங்கள் எழுந்து அவர் உள்ளத்தை வதைத்தன. நந்தினியின் நடத்தையில் அணுவளவும் களங்கம் ஏற்படக் கூடும் என்று அவர் எண்ணவில்லை. ஆயினும் நந்தினியை யொத்த பிராயமுடைய மூன்று வாலிபர்களுக்கு மத்தியில் அவளைத் தனியே விட்டு விட்டு வந்திருக்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி அவர் மனத்தில் தோன்றி வேதனை தந்தது..
‘தம்பி கூறியதே சரியாகப் போய் விடுமோ? நந்தினி தம்மை வஞ்சித்து விடுவாளா? ஆகா! கதைகளில் சொல்லுகிறார்களே! அது போன்ற வஞ்சக நெஞ்சமுள்ள ஸ்திரீகள் உண்மையிலேயே உலகத்தில் உண்டா? அவர்களில் ஒருத்தி நந்தினியா?…’