Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
நந்தினியும் வந்தியத்தேவனும் நின்ற இடத்தை அணுகி இளவரசரும் மணிமேகலையும் வந்து சேர்ந்தார்கள்.
அருகில் வரும் வரையில் இளவரசர் வந்தியத்தேவனை நோக்கிய வண்ணம் வந்தார். கிட்ட வந்ததும் நந்தினியை ஏறிட்டுப் பார்த்தார். அவளுடைய ஒரு கன்னத்திலும் ஒரு தோளிலும் சிவந்த கோடுகள் போன்ற காயங்களிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டார்.
“ஐயோ! உங்களை அந்தப் பாழாய்ப்போன புலி காயப்படுத்திவிட்டதா, என்ன?” என்றான்.
“ஆம், ஐயா! ஆனால் அந்தப் புலி என் உடம்பைத்தான் காயப்படுத்தியது; நெஞ்சிலே காயம் உண்டாக்கவில்லை!”
இந்த வார்த்தைகள் கரிகாலருடைய நெஞ்சிலே பாய்ந்தன. அவர் மேலே எதுவும் சொல்லுவதற்குள் மணிமேகலை நந்தினியின் அருகில் பதட்டத்துடன் சென்று, “ஆம், அக்கா! நன்றாய்க் கீறி விட்டிருக்கிறதே! நல்ல வேளையாக அஞ்சனம் கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள், போட்டு விடுகிறேன்! உடனே போட்டால் காயம் சீக்கிரம் குணமாகிவிடும்!” என்றாள்.
“தங்காய்! இந்த மாதிரி காயங்கள் எனக்குச் சர்வசாதாரணம் எத்தனையோ காயங்கள் பட்டு ஆறியிருக்கின்றன. நெஞ்சில் படும் காயத்தை ஆற்ற ஏதாவது அஞ்சனம் இருக்கிறதா, சொல்!” என்றாள்.
“ஓ! இருக்கிறது, அக்கா! அதுவும் இருக்கிறது!” என்று மணிமேகலை சொல்லிவிட்டு நந்தினியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பளிங்கு மண்டபத்துக்குச் சென்றாள்.
இளவரசரும் வந்தியத்தேவனும் சிறிது பின்னால் சென்று மண்டபத்துக்கு அருகில் ஒரு விசாலமான மாமரத்தின் அடியில் அமைந்திருந்த சலவைக் கல் மேடையில் அமர்ந்தார்கள்.
“ஐயா! எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போகிறோமோ அவ்வளவுக்கு நல்லது! அதிக நேரம் தங்கினால் கந்தமாறனும் அவன் தந்தையும் ஏதாவது தவறாக எண்ணிக் கொள்ளலாம்” என்றான் வந்தியத்தேவன்.
“யார் வேணுமானாலும் தவறாக எண்ணிக் கொள்ளட்டும். நம் தலையை வாங்கிவிடுவார்களா, என்ன? இந்தப் பெண்கள் நம்மைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளாமலிருந்தால் போதும். அவர்கள் வந்ததும் சொல்லிக் கொண்டு புறப்படலாம்” என்றார் இளவரசர்……………