Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
நந்தினி ஒளி வீசிய அந்த வாளை எடுத்து ஆசையுடன் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். பிறகு முகத்துடன் சேர்த்து வைத்துக் கொண்டு தன் செவ்விதழ்களினால் முத்தமிட்டாள். ஒரு கணம் அக்கினிக் கொழுந்தைச் செந்தாமரை மலர் முத்தமிடுவது போலிருந்தது. அடுத்த கணத்தில் இரத்த வர்ம மேகம் பூரண சந்திரனைக் குறுக்கே நின்று தடுக்கப் பார்ப்பது போலிருந்தது. நந்தினியின் முகம் அப்போது காபாலிகர்கள் பூசித்த இரத்த பலி கேட்கும் காளியின் கோர சௌந்தரிய முகம் போலாயிற்று. கத்தியை எடுத்து முன்போல் பக்கத்தில் வைத்ததும் அவளுடைய முகம் பழைய வசீகரத்தை அடைந்தது.
“ஆம், தெய்வம் எனக்கு அளித்திருக்கும் சூசகம் இந்த வாள். ஆனால், அந்தச் சூசகத்தின் பொருள் இன்னதென்பதை நான் இன்னும் அறியவில்லை. இந்த வாளை நான் அடிக்கடி கொல்லன் உலைக்கு அனுப்பித் துருநீக்கிப் பதப்படுத்திக் கூராக்கி வைத்துக் கொண்டு வருகிறேன். தாய்ப்புலி தான் பெற்ற குட்டிப் புலியைப் பாதுகாப்பதுபோல் இதை நான் பாதுகாத்து வருகிறேன். உரிய பிராயம் வருவதற்குள் புலிக்குட்டி நீண்ட கொம்புகள் படைத்த காட்டு மாடுகளிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது அல்லவா? அராபிய நாட்டார் தங்கள் குதிரையை எவ்வளவு அன்புடன் பேணுகிறார்களோ அப்படி இதை நான் பாதுகாத்து வருகிறேன். நோய்ப்பட்ட சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு வானமாதேவி பணிவிடை செய்வதுபோல் நானும் இந்த வாளுக்குச் செய்து வருகிறேன். இதைக் கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெய்வம் இன்னும் எனக்கு அறிவிக்கவில்லை. மலர்மாலை தொடுத்துப் பழகிய இந்தக் கைகளினால் இந்த வாளை எந்தக் கொடியவனுடைய விஷ நெஞ்சத்திலாவது செலுத்த வேண்டுமென்பது தெய்வத்தின் ஆக்ஞையோ அல்லது என்னுடைய மார்பில் என்னுடைய கையினாலேயே இதைச் செலுத்திக் குபுகுபுவென்று பெருகும் இரத்தத்தை ஆடை ஆபரணங்களால் அலங்கரித்த இந்த உடம்பில் பூசிக் கொண்டு நான் சாகவேண்டும் என்பது தெய்வத்தின் சித்தமோ, இன்னும் அது எனக்குத் தெரியவில்லை. இந்த வாளை எனக்கு அளித்திருக்கும் தெய்வம், சமயம் வரும்போது அதையும் எனக்குத் தெரியப்படுத்தும். அந்தச் சமயம் எப்போது வரும் என்று தெரியாத படியால் இரவும், பகலும் எந்த நேரத்திலும் ஆயத்தமாயிருக்கிறேன். ஆம்; அழகிற்குப் பெயர்போன பழுவூர் இளைய ராணிக்கு ஆடை ஆபரண, அலங்காரங்களில் மிக்க பிரியம் என்பது நாடறிந்த செய்தி. இரவு பகல் அறுபது நாழிகையும் நான் இந்த என் மேனியை அலங்கரித்து அழகு படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். பாவம்! பெரிய பழுவேட்டரையர் அவருக்காகவும், அவருடைய கௌரவத்தை முன்னிட்டும் நான் இப்படி சதா சர்வகாலமும், சர்வாலங்காரத்துடன் விளங்குவதாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்! என் நெஞ்சத்தில் கொழுந்துவிட்டெரியும் தீயை அவர் அறியார்!”