Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“மின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு.
“ரவிதாஸா! நீ இப்படித்தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். ‘நாள் நெருங்கிவிட்டது’ ‘யமன் நெருங்கிவிட்டான்’ என்றெல்லாம் பிதற்றுகிறாய்? யமன் வந்து யார் யாரையோ கொண்டு போகிறான்! ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே அஞ்சுகிறான். ஈழநாட்டில் நாம் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே?…”
“அதனால் குற்றமில்லை, அப்பனே! யமதர்மராஜன் உன்னையும் என்னையும் விடப் புத்திசாலி! மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும் காத்துக் கொண்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது. நல்ல வேளையாக, நீயும் இங்கே வந்து சேர்ந்தாய்! சரியான யம தூதன் நீ! ஏன் இப்படி நடுங்குகிறாய்! கொள்ளிட வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டாயா? படகு கொண்டு வந்து வைத்திருக்கிறாய் அல்லவா?”