“பொன்னியின் செல்வா! வருங்காலத்தைப் பற்றித் தாங்கள் இத்தனை உற்சாகத்துடன் பேசுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது!” என்றார் பிக்ஷு..
“அது உண்மைதான், ஐந்நூறு ஆண்டுகளாக நடவாத சம்பவம் இன்று பிற்பகலில் ஒரே முகூர்த்த நேரத்தில் நடந்துவிடும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? கருணைக் கடலாகிய புத்த பகவான் பொங்கி வந்த கடலின் கோபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றினார். .
“குருதேவரே! நான் முன்னின்று நடத்தினால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும். பாண்டவர்களின் அக்ஞாத வாசத்தைப் பற்றித் தாங்கள் கூறியது என் நெஞ்சில் பதிந்திருக்கிறது. நமது செந்தமிழ் நாட்டுப் பொய்யாமொழிப் புலவரின் வாக்கும் நினைவுக்கு வந்தது.
தீமை இலாத சொல்லல்’
என்றும்
நன்மை பயக்கு மெனின்’
என்றும் தமிழ் மறை கூறுகிறதல்லவா? என்னை நான் இச்சமயம் ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பமும் கலகமும் விளையலாம் என்று அறிவிற் சிறந்த என் தமக்கையார் கருதுகிறார். நான் மறைந்திருப்பதனால் யாருக்கும் எத்தகைய தீமையும் இல்லை. ஆகையால் புயலின் கொடுமையினால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் மக்களுக்குத் தாங்கள்தான் அரண்மனையில் உள்ள பொருளைக் கொண்டு உதவி புரிய வேண்டும்” என்றார் இளவரசர்..