Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல மகிமையையன்றி, ‘குடந்தை சோதிடராலும் அது புகழ்பெற்றிருந்தது. குடந்தைக்குச் சற்றுத் தூரத்தில் தென் மேற்குத் திசையில் சோழர்களின் இடைக்காலத் தலைநகரமான பழையாறை, வானை அளாவிய அரண்மனை மாடங்களுடனும் ஆலய கோபுரங்களுடனும் கம்பீரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
பழையாறை அரண்மனைகளில் வசித்த அரச குலத்தினர் அனைவருடைய ஜாதகங்களையும் குடந்தை சோதிடர் சேகரித்து வைத்திருந்தார். அப்படிச் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் புரட்டித்தான் கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார். சிறிது நேரம் ஜாதகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, சோதிடர் வானதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். திரும்ப ஜாதகத்தைப் பார்த்தார். இப்படி மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, வாயைத் திறந்து ஒன்றும் சொல்லுகிற வழியைக் காணவில்லை.
“என்ன, ஜோசியரே! ஏதாவது சொல்லப் போகிறீரா, இல்லையா?” என்று குந்தவை தேவி கேட்டாள்.
“தாயே! என்னத்தைச் சொல்வது? எப்படிச் சொல்வது? முன் ஒரு தடவை தற்செயலாக இந்த ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன். என்னாலேயே நம்ப முடியவில்லை; இப்படியும் இருக்க முடியுமா என்று சந்தேகப்பட்டு வைத்து விட்டேன். இப்போது இந்தப் பெண்ணின் திருமுகத்தையும் இந்த ஜாதகத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, திகைக்க வேண்டியிருக்கிறது!”
“திகையும்! திகையும்! போதுமானவரை திகைத்துவிட்டு பிறகு ஏதாவது குறிப்பாகச் சொல்லும்!”