அத்தியாயம் 4 – கடம்பூர் மாளிகை (PS-1)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.

கோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வெளிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. ‘ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே’ என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்னவென்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆவலும் ஒருபக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவுகள் திறந்துதானிருந்தன. ஆனால் திறந்திருந்த வாசலில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது.

தயங்கி நின்றால் தன்னை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்றும் தைரியமாகக் குதிரையை விட்டுகொண்டு உள்ளே போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம்? குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலு பேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தான். இன்னொருவன் தீவர்த்தி கொண்டுவந்து உயரத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *